புது தில்லி: தமிழக நலத் திட்டங்களுக்கு உதவக் கோரி, தில்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். மேகதாது அணைப் பிரச்னை, முல்லைப் பெரியாறு, ஆந்திர என்கவுண்டர் என தமிழகத்தின் ஐந்து முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதற்காக அவர் தலைமையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு திங்கள்கிழமை தில்லி சென்றது. பின்னர் நரேந்திர மோடியை சந்தித்த கையோடு, விஜயகாந்த் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் நிலுவையில் உள்ள தேசிய சாலைத் திட்டங்கள், தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் நடைபெறும் மேம்பாலங்கள் மற்றும் திட்டங்களை விரைந்து முடிக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற விவாகரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து, அவரிடம் தமிழகத்தில் நிலுவையில் உள்ள நலத்திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றை காலதாமதம் இன்றி நிறைவேற்ற வலியுறுத்தினார். பின்னர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, ஆந்திராவில் 20 தமிழகர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்தார். பின்னர், நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தமிழக அரசின் ரூ.2 லட்சம் கோடி கடன் சுமைக்குத் தீர்வு காணவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் நிலுவையில் உள்ள நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கவும் வலியுறுத்தினார். தில்லியைச் சுற்றி வரும் விஜயகாந்த், தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளது என்பதைக் காட்டவும், அடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் துடிப்பாகக் களம் இறங்கவும் திடீரென இவ்வாறு களம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கோரிக்கைகளை முன்வைத்து தில்லியை சுற்றினாலும், கூட்டணி சார்பில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதை பாஜக தலைமையிடம் முன்வைக்கவும் இந்த பயணத்தை அவர் பயன்படுத்திக் கொண்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
தமிழக திட்டங்களுக்கு உதவக் கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்தார் விஜயகாந்த்
ஒருவர் இரு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்கலாம்: இலங்கையில் முக்கிய சட்டத்திருத்தம் நிறைவேற்றம்
கொழும்பு: இலங்கையில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற முக்கியமான சட்டத் திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இலங்கை அதிபராக இருந்த ராஜபட்ச 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் தனக்கு சாதகமாக பல அதிகாரங்களை மாற்றிக் கொண்டார். குறிப்பாக இலங்கை அதிபராக ஒருவர் 2 முறை மட்டுமே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்று இருந்த வரைமுறையை நீக்கினார். அதன் பின் 3ஆவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அவர் படுதோல்வியை சந்தித்தார். தற்போது சிறீசேன தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றதும், ராஜபட்ச செய்த பல தவறுகளை அது நீக்கி வருகிறது. அந்த வகையில் இலங்கை அதிபராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பது உள்ளிட்ட 19-வது சட்டத் திருத்தத்தை (19ஏ) கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு முழுமையான பெரும்பான்மை இல்லாத நிலையில், இது நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இந்த சட்டத் திருத்தம் மீது இரண்டு நாட்களுக்கு விவாதம் நடந்த நிலையில், நேற்று அதன் மீது வாக்கெடுப்பு நடந்தது. அப்போது இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக 215 ஓட்டுகளும், எதிராக ஒரே ஒரு ஓட்டும் விழுந்தது. இதன் மூலம் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இந்தோனேசியாவில் ஈழத் தமிழர் சுகுமாரன் உள்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
பாலி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர் சுகுமாரன் உள்பட 8 பேரை சுட்டுக்கொன்று இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆன்ட்ரூ சான், ஆஸ்திரேலிய வாழ் ஈழத் தமிழரான மயூரன் சுகுமாரன் ஆகியோர் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றுமாறு தீர்ப்பளித்தது. இதையடுத்து இருவரும் அதிபருக்கு கருணை மனு அனுப்பினர். ஆனால் அவை நிராகரிப்பட்டன. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ஆன்ட்ரூ சான், சுகுமாரன், நைஜீரியா, பிரேசில் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியர் என 8 பேருக்கு புதன்கிழமை இன்று அதிகாலை நுசகம்பங்கன் தீவில் உள்ள சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்கள் எட்டு பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களுடன் சேர்த்து பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மேரி ஜேன் பீஸ்டா வெலோசோவுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அவரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வேண்டுமென்றே யாரோ சிக்க வைத்ததாக பிலிப்பைன்ஸ் அதிபர் தெரிவித்ததன் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டது. பல்வேறு வேண்டுகோள்களுக்கு மத்தியிலும், ஆன்ட்ரூ மற்றும் சுகுமாரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியா இந்தோனேசியாவுக்கான தனது தூதரை வாபஸ் பெற்றுள்ளது.
வங்கியில் இருந்து பேசுவதுபோல் கிரெடிட் கார்ட் தகவல்களைப் பெற்று பணமோசடி: தில்லி இளைஞர்கள் 2 பேர் கைது
சென்னை: சென்னையில் வாடிக்கையாளர்களிடம் வங்கியில் இருந்து பேசுவதுபோலப் பேசி, ஏ.டி.எம். கிரெடிட் கார்ட் அட்டை குறித்த தகவல்களைப் பெற்று பணமோசடி செய்த தில்லி கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸார் தெரிவித்த தகவல்: சென்னை அம்பத்தூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பகுதி மேலாளராக இருப்பவர் பிரகாஷ். இவர் சில நாள்களுக்கு முன்பு சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில், தங்களது வங்கியின் வாடிக்கையாளர்கள் 42 பேரிடம் சில மர்ம நபர்கள் வங்கியில் இருந்து பேசுவதுபோல பேசி, அவர்களது ஏ.டி.எம். அட்டைகள் பற்றிய ரகசிய எண், காலாவதி நாள், சி.வி.வி. எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டு மோசடி செய்துள்ளனர். இந்தப் புகார் குறித்து சைபர் குற்றப்பிரிவுப் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். போலீஸார் நடத்திய விசாரணையில், தில்லியில் இருந்து ஒரு கும்பல்தான் இந்த மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. ஏனெனில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்படும் பணம், ஏர்டெல் மணி கணக்குக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதும், அங்கிருந்து சிலரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஏர்டெல் செல்லிடப்பேசி சிம்கார்டை பெற்றுக் கொடுத்த முகவர்கள், புதுதில்லி உத்தம்நகர் ஹாஸ்ட்சல் சாலை பகுதியைச் சேர்ந்த தே.தீப்குமார் (33), அதேப் பகுதியைச் சேர்ந்த இ.பிரவீண்குமார் காசியப் (32) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் சிறிய அளவில் சூப்பர் மார்க்கெட்டும், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதும், அங்கு புதிய சிம்கார்டுகள் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் வழங்கும் ஆவணங்களை 3 நகல்களுக்கு மேல் வாங்கி, அதன் மூலம் தங்களுக்கு 3 சிம் கார்டுகள் வரை வாங்கியிருப்பதும் தெரியவந்தது. இவ்வாறாக போலி சான்றிதழ் பெறப்பட்ட சிம்கார்டுகளை அதேப் பகுதியைச் சேர்ந்த அஸ்ரப்அலி, சன்னி ஆகிய இருவருக்கு விற்பனை செய்திருப்பதும், அவர்கள் அந்த சிம்கார்டுகள் மூலமாகவே ஏர்டெல் மணி கணக்கு தொடங்கியிருப்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தீப்குமாரையும், பிரவீண்குமார் காசியப்பையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் வழக்கின் முக்கிய எதிரிகளான அஸ்ரப் அலியையும்,சன்னியையும் போலீஸார் தேடி வருகின்றனர். வங்கி அலுவலர்கள் பேசுவதுபோல பேசி வாடிக்கையாளர்களிடம் தகவல்களைப் பெறுவதற்கு மோசடிக் கும்பல் புது தில்லியில் போலி கால்சென்ட்டர் ஒன்றையே நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு சேவைகளைப் பற்றி பேசுவதற்கும், வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்துவது குறித்து பேசுவதற்கும் கால்சென்ட்டர்களை வங்கிகள் நடத்தி வருகின்றன. இதே உத்தியை மோசடி கும்பலும் பயன்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்களை திருட்டுத்தனமாகப் பெறுவதற்காக போலி கால்சென்ட்டர்களை, வழக்கின் முக்கிய எதிரிகளான அஸ்ரப் அலியும், சன்னியும் நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கால்சென்ட்டர்களில் வேலை செய்தவர்களிடமும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். கால்சென்ட்டர்களில் வேலை செய்தவர்களிடமிருந்து செல்லிடப்பேசி, சிம்கார்டு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீஸார், இந்த கும்பல் எத்தனை பேரிடம் மோசடி செய்துள்ளார்கள் என்ற விவரத்தையும் திரட்டி வருகின்றனர்.
ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 6% உயர்வு
சென்னை: ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதேபோல், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 6 % அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் 107% ஆக இருந்த அகவிலைப்படியை 113% ஆக 2015 ஜன., 1ஆம் தேதி முதல் ரொக்கமாக வழங்க அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு, அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும் உள்ளாட்சி மன்றக் கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் ஏனைய ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என நிதித்துறை முதன்மை செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் குறித்த மோடியின் டிவிட்தான் நேபாள பிரதமருக்கு முதல் தகவல்
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா இந்தியப் பிரதமர் மோடியின் டிவிட்டர் செய்தியை வைத்தே தெரிந்து கொண்டுள்ளார். அதுதான் அவர் பெற்ற முதல் தகவலாம். நேபாளத்தில் சனிக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆகப் பதிவான மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா நேபாளத்தில் இல்லை. அவர் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேசியா சென்றிருந்தார். அவர் தனது நாட்டுக்குத் திரும்பும் வழியில் தாய்லாந்து நாட்டில் பாங்காக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெறச் சென்றார். அவர், பாங்காக் விமான நிலையத்தில் இறங்கியபோது, யதேச்சையாக தனது டிவிட்டர் கணக்கைப் பார்த்துள்ளார். அப்போது, நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து வருத்தமும் உடனடி உதவியும் செய்வதாகக் குறிப்பிட்டிருந்த பிரதமர் மோடியின் ட்வீட் இருந்ததைப் பார்த்துள்ளார். அதை அடுத்தே தன் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அவர் தெரிந்து கொண்டுள்ளார். இதனை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மகேந்திர பகதூர் பாண்டே தெரிவித்துள்ளார். சுஷில் கொய்ராலாவுடன் இந்தோனேஷியா மாநாட்டுக்குச் சென்றிருந்த பாண்டே இது குறித்துக் கூறுகையில், மோடியின் ட்வீட்டைப் பார்த்தே நாங்கள் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து அறிந்தோம். பின்னர் மேல்விவரம் கேட்டு அறிந்து கொண்டோம். பிறகு நாட்டுக்கு போன் செய்து அவ்வப்போது தகவல்களைப் பெற்றோம். நானும் மோடியின் ட்வீட்டைப் பார்த்தே அறிந்துகொண்டேன். மோடியின் உதவியை நாங்கள் மறக்க மாட்டோம். அவருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்று கூறியுள்ளார். இந்தோனேஷியாவில் இருந்து சுஷில் கொய்ராலா நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நேபாள நிலநடுக்கம் குறித்தும், உதவிகள் குறித்தும் பேசுவதற்காக மோடி, அப்போது கொய்ராலாவை போனில் தொடர்பு கொள்ள அதிக நேரம் முயன்றார். ஆனால், அது முடியவில்லை,. உடனே, அமைச்சரவை அவரசக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி உதவிகளை விரைவு படுத்துவது குறித்துப் பேசினார். நேபாள பிரதமரை உடனடியாக போனில் தொடர்பு கொள்ள இயலாமல் போனதை அவர் தனது டிவிட்டரிலும் தெரிவித்திருந்தார். பின்னரே அவர் தாய்லாந்தில் இருந்த கொய்ராலாவுக்கு போன் செய்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாள் கொய்ராலா நாடு திரும்பினார்.
முதலில் சாலையை சரி பண்ணுங்க; அப்புறம் சட்டத்தை நிறைவேற்றுங்க
புதுக்கோட்டை: இந்தியாவில் பல்வேறு காரணங்களால் வாகனங்கள் அதிகரித்து வருவதோடு சாலை விபத்துகளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது நம் நாட்டில் ஓரு ஆண்டுக்கு 1.38லட்சம் பேர் பலியாகின்றனர் மேலை நாடுகளான அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளின் உள்ள சட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின் மோட்டார் வாகனச்சட்டத்திலும் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொன்றுள்ளது இந்த புதிய சட்டதிருத்தின்படி 12வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மீது வாகனம் மோதி உயிரிழப்பு ஏற்பட்டால் 7ஆண்டுகள் சிறை ரூ.4லட்சமும் 12வயதிற்கு மேல் உள்ளவர்கள் மீது மோதி உயிரிழப்பு ஏற்பட்டால் 3ஆண்டுகள் சிறை ரூ.4லட்சம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது மேலும் கூடுதல் சுமைக்கு ரூ.50ஆயிரமும் சிக்கனலில் நிற்காமல் சென்றால் ரூ.15ஆயிரம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட உள்ளன கடுமையான சட்டங்கள் அமலில் உள்ள வளர்ந்த நாடுகளில் சரக்கு வாகன போக்குவரத்துக்கு எனத்தனியாக சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன ஆனால் நம் நாட்டில் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் பொதுவான சாலைகளே உள்ளன இந்த சூழ்நிலையில் மேலை நாடுகளின் அடிப்படையில் கடுமையானச்சட்டங்களை அமல்படுத்துவது நம் நாட்டிற்கு பொருந்துவதாக இருக்காது கடும் விதிமுறைகள் கொண்ட இந்த சட்டத்திற்கு தமிழக அரசம் எதிரிப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது இதற்கு சிஜடியு தொழிற்சங்கம் சார்பில் நாளை பேருந்து லாரி ஆட்டோ ஸ்டிரைக் அனைத்தும் ஓடாது என்று அறிவித்தோடு அதிமுகவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது செய்தி. பொ.ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை
இந்தோனேஷியாவில் கொல்லப்பட்ட மயூரன் சுகுமாரனின் தங்கை கதறல்
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாரனை, சிறையில் கடைசியாக அவரது குடும்பத்தினர் நேற்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. முன்னதாக சிறைக்குச் செல்வதற்கு முன், அங்குள்ள விஜயபுரா துறைமுகத்துக்கு வந்துசேர்ந்த மயூரன் சுகுமாரனின் தங்கை பிருந்தா, தனது அண்ணனின் பரிதாப முடிவை நினைத்துக் கதறி அழுதார். அது அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
டிவிட்டரில் மோடி 3வது உச்சபட்ச பிரபலம்: பின்தொடர்பவர்கள் 11 மில்லியன்
பெர்லின்: டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் இப்போதும் முதலிடத்தில் உள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவருக்கு அடுத்தபடியாக போப் பிரான்ஸிஸ் அதிகபட்ச பின் தொடர்பவர்களக் கொண்டுள்ளார். அடுத்த இடத்தில் இந்தியப் பிரதமர் மோடி உள்ளார். இதனை டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகம் பேர் ரிடிவிட் செய்யும் நபராகவும் மோடி திகழ்கிறார். வருடாந்திர டிவீட் தொகுப்பை வைத்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில், தற்போது 57 மில்லியல் மக்கள் ஒபாமாவைத் தொடர்கிறார்கள். போப் 19.5 மில்லியன் மக்கள் பின் தொடர்தலுடனும், மோடி 11 மில்லியன் மக்கள் பின் தொடர்தலுடனும் உள்ளதாக அது தெரிவித்துள்ளது. துருக்கி அதிபர் எர்டோகான் 6 மில்லியன், வெள்ளை மாளிகை 6 மில்லியன் மக்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
தில்லியை ஆளில்லா விமானம் மூலம் தாக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம்
புது தில்லி: தில்லியில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தில்லி போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தில்லியில் ஆளில்லா விமனங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் தில்லியில் பறக்கும் அனைத்து விமானங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தில்லியில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்று இயக்கப்படும் ஆளில்லா விமானங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.

