புதுதில்லி: நேபாளத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள், முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இன்று காலை 9.30க்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தோனேஷியாவுக்கான தனது தூதரை திரும்பப் பெற்றது ஆஸ்திரேலியா: இருவர் தூக்கிலிடப் பட்டதற்கு எதிர்வினை
சிட்னி: ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட், இன்று இந்தோனேஷிய நாட்டுக்கான தனது நாட்டு தூதுவரை திரும்ப அழைத்துக் கொள்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவரை, எவ்வளவோ வேண்டுகோள்களுக்கு மத்தியிலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்கிலிட்ட இந்தோனேஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா மேற்கொண்டது. இது குறித்து கான்பெர்ராவில் டோனி அப்போட் தெரிவித்தபோது, “நாங்கள் இந்தோனேஷியாவின் இறையாண்மையை மதிக்கிறோம். இந்தோனேஷியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நல்லுறவு திகழ விரும்புகிறோம். ஆனால், இந்த விவகாரத்தால், கடந்த சில நாட்களாக உறவு பாதிக்கப்பட்டது. எனவே இந்த நடவடிக்கை வழக்கமான ஒன்றுதான்.” என்று கூறியுள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன், அண்ட்ரூ சான் இருவருக்கும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நேபாளத்துக்கு இந்தியா அனுப்பியது ரூ.1 கோடி மதிப்பில் இன்சுலின்
புதுதில்லி: நேபாளத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இன்சுலின் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக வழங்குவதற்காக, ரூ.1 கோடி மதிப்பிலான இன்சுலின் உடனே அனுப்பப் பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ரூ.1 கோடி மதிப்புள்ள 75 ஆயிரம் இன்சுலின் யூனிட்கள் நேபாளத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நேபாளத்துக்கு 15 மில்லியன் டாலர்; ஐ.நா.உதவி
நேபாளத்துக்கு ஐ.நா. சபை சார்பில் 15 மில்லியன் டாலர் அளவில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. மருந்துப் பொருள்கள், மின்சாரம், தண்ணீர், உணவு என அதிகம் தேவைப்படும் நேபாளத்துக்கு அவசர காலப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. து.தலைமைச் செயலர் வாலெரி அமோஸ் டிவீட்டர் செய்தியில் ஐ.நா.வின் அவசரகால நிதியிலிருந்து நேபாளத்துக்கு 15 மில்லியன் டாலர் உதவி உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி உதவி
சென்னை: நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில், தமிழகத்தின் சார்பில், தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளில் தற்போதைய அவசியத் தேவையைக் கருதி, ரூ.5 கோடி நிவாரண உதவியை நேபாள அரசுக்கு தமிழக அரசு வழங்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக அங்கு பலர் உயிரிழந்ததுடன், குடியிருப்புகளும் சேதமடைந்தன. அத்துடன் அதன் அருகில் உள்ள பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களும் பாதிக்கப்பட்டன. நேபாள நாட்டில் உள்ள பல்வேறு புனிதத் தலங்களை தரிசிக்கச் சென்ற அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக திரும்புவதற்காக தமிழக அரசு ஏற்கெனவே சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. குறிப்பாக கட்டுப்பாட்டு அறை, தொலைபேசி எண்கள் மற்றும் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக அணுகும் வகையில் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் இலவச தங்கும் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேபாளம்: அழிந்து போன அழகு
நேபாளம் – இமய மலையின் அழகையெல்லாம் சுமந்து கொண்டிருந்த அழகு மிகுந்த தேசம். நேபாளத்தின் அழகு இன்று சிதைந்து போய் விட்டது. இயற்கை பூகம்பச் சீற்றத்தின் காரணத்தால் அழிந்து போன இதன் அழகை இப்போது காண்பவர்களுக்கு உள்ளம் குமுறும். நேபாளத்தின் இயற்கை அழகை அருமையாகப் படம்பிடித்துக் காட்டும் ஆவணப் படம் இது. நியூயார்க் டைம்ஸ் இதழின் ஆவணப் படம். [su_youtube url=”https://youtu.be/um42zbUTT90″]
ஆந்திர என்கவுண்டர்: 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு
ஹைதராபாத்: ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, நேற்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆந்திர போலீசார் வழக்கு விசாரணைக் கோப்புகளை அளித்தனர். அதில், ஏப்.14 ஆம் தேதிக்குப் பின்னர் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் எதுவும் இல்லாதது கவலையளிப்பதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், விசாரணை நடத்தும் போலீசார், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் ஆலோசனை பெறாமல், சுதந்திரமாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். காவல்துறை அதிகாரி ரவிசங்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு ஏன் விசாரணையைத் தொடங்கவில்லை என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால், அடுத்த 60 நாட்களுக்குள் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட ஹைதராபாத் உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
இந்தியாவின் உதவி நிரப்பப்படாத காசோலையாக நீண்டு கொண்டே போகிறது: நேபாளம்
காத்மாண்டு: இயற்கைப் பேரழிவான நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் உடனடி மீட்புப் பணி மற்றும் சீரமைப்புக்காக இந்தியா செய்துவரும் உதவிகள் நிரப்பப்படாத காசோலை – ப்ளாங் செக் – போல் நீண்டு கொண்டே செல்கிறது என்று உருக்கமாகக் கூறியுள்ளது நேபாளம். இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 5,057 பேர் பலியானதாகத் தெரிந்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தில் இந்தியாவின் மீட்புப் பணிகள்: அமெரிக்க தூதர் பாராட்டு
புதுதில்லி: நில நடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளை அமெரிக்கத் தூதர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். புது தில்லியில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வெர்மா, அண்மைக் காலங்களில் இந்தியா தனது உலகளாவிய தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளது. முதலில் ஏமனில் மீட்புப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்ட இந்தியா தற்போது நேபாளத்திலும் அதைச் சிறப்பாக செய்துள்ளது. இதற்காக நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்தியாவின் மீட்புப் பணிகளால் நாங்கள் (அமெரிக்கா) மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம். எங்கள் ஒத்துழைப்பு விரிவடைந்து வருவதால் இந்தியா சி-17எஸ், சி-30எஸ் ரக ஹெலிகாப்டர்களை மீட்புப் பணிகளில் பயன்படுத்தி வருகிறது. நமது உறவுகள் வளர்ந்து வருவதால், நாம் மேலும் ஒன்றிணைந்து சிறப்பாகச் செய்ய முடியும் என்றார்.
கேரளாவுக்கு கோழி கடத்தல்: தடுத்த அதிகாரிகளைக் கொல்ல முயன்ற இளைஞர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவுக்கு கோழிக் கடத்தலில் ஈடுபட்ட இளைஞரைத் தடுத்த அதிகாரிகளைக் கொல்ல முயற்சி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப் படுகின்றன. இதைத் தடுக்க எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசாரும், அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள். பாறசாலை சோதனைச் சாவடியில் வணிக வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் வந்தது. அதன் இருபுறமும் ஏராளமான கோழிகள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதிகாரிகள் மீது வண்டியை மோதிவிட்டு தப்ப முயன்றார். இதில் அதிகாரிகள் சந்திரபாபு, பிஜு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அந்த மோட்டார் சைக்கிளும் நிலை தடுமாறிக் கீழே விழுந்தது. இதனால், ஊழியர்கள் விரைந்து சென்று மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாறசாலையச் சேர்ந்த முகமது (23) என்பதும் குழித்துறையில் இருந்து கேரளாவுக்கு கோழிகள் கடத்துவதும் தெரிய வந்தது. இதை அடுத்து, அவரிடம் இருந்து 145 கிலோ எடை கொண்ட கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டது. முகமது நெய்யாற்றின்கரை போலீசில் ஒப்படைக்கப் பட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

