வேலூர்: செம்மரம் கடத்தல் வழக்கில், கரகாட்டக்காரி மோகனாம்பாளை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய, ஆந்திர சிறப்புப் படை போலீஸார் வேலூரில் முகாமிட்டுள்ளனர். திருப்பதி வனப் பகுதியில், கடந்த 7ம் தேதி, ஆந்திர போலீஸார் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து ஆநதிர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களை, ஆந்திர போலீஸார் கைது செய்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட போலீஸார் நேற்று வேலூர் வந்து, மோகனாம்பாளை சித்தூர் அழைத்துச் சென்றனர். அங்கு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது செம்மரக் கடத்தலில் ஆந்திரா, தமிழகத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள், செம்மர பதுக்கல் இடங்கள். கடத்தலுக்கு பண உதவி செய்பவர்களின் விவரம், மரம் வெட்ட ஆட்களை அனுப்பும் முகவர்கள் உள்ளிட்ட பட்டியலைக் கொடுத்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து மோகனாம்பாளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியா நியமனம்
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞராக பி.வி. ஆச்சாரியா நியமிக்கப்பட்டுள்ளார். உதவி வழக்கறிஞராக சந்தே சௌதா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. இதை அடுத்து, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டில் விரைவில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து புதிய அரசுத் தரப்பு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்தது. இந்த வழக்கில், பவானி சிங்கிற்கு முன்னர் பி.வி. ஆச்சாரியாவே அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வந்தார். ஆனால் தமக்கு ஏற்பட்டுள்ள சில அழுத்தங்களின் காரணமாக தாம் இதில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் கூறினார். புதிதாக நியமிக்கப் பட்டுள்ள அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, தனது தரப்பு வாதத்தை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், ஏற்கெனவே விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என் மகள் நடிக்கிறாரா?: வதந்தி என்கிறார் சச்சின்
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் மகள் குறித்து வெளியான செய்திகளால் தற்போது வேதனை அடைந்துள்ளார். அவரது 17 வயது மகள் சாரா புதிதாக எடுக்கப்படவுள்ள படத்தில் நடிக்கப் போவதாக வதந்தி பரவியது. அந்தப் படத்தில் சாகித் கபூர் ஜோடியாக நடிப்பார் எனவும் தகவல் வெளியானது. ஆனால் இது வெற்று வதந்தியே என்கிறார் சச்சின். எனது மகள் படத்தில் அல்ல… படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். அவர் சினிமாவில் நடிக்கப் போவதாக வெளியான தகவல் என்னை வேதனைப் படுத்துகிறது என அவர் தெரிவிதுள்ளார். உலக சாதனைகள் பல படைத்துள்ள சச்சினின் வாழ்க்கை குறித்து ஆவணப் படம் தயாராகிறது. இது குறித்து சச்சின் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தனது ரசிகர்களிடம் கடந்த மார்ச் மாத்தில் ஆலோசனை கேட்டார். இந்தப் படத்தை மும்பையின் 200 நாட் அவுட் என்ற நிறுவனமும் வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. லண்டனில் வசிக்கும் இயக்குனர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இதை இயக்குகிறார். இதில் சச்சின் நடிப்பதுடன் பெருமளவில் நிதி உதவியும் செய்துள்ளாராம்.
அமைப்புசாரா கட்டடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்க்கு உதவித் தொகை வழங்க உத்தரவு
அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களின் நலவாரிய உறுப்பினர்களுக்கு உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று மாநில சமூகப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்க வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதியோர் ஓய்வுதியம் ஆகியவை முறையாக வழங்காமல் தாமதம் ஏற்படுவதாக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கடந்த நாண்கு ஆண்டுகளாக புகார் தெரிவித்து வந்தனர் . பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர் ;. இதனை தொடர்ந்து பாரத காந்திஜி அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திர காந்தி, மதுரை உயர் நீதி மன்றத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு உடனடியாக அரசு உதவித்தொகை மற்றும் ஓய்வுதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர் . இதனை ஏற்று விசாரணை செய்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் சமுக பாதுகாப்பு துறைக்கு உதவித்தொகையை உடனடியாக வழங்கும்படி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் இதுபற்றி நீதிபதி தமது உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்பு சட்ட விதிகளின் படி அரசின் சலுகைகளை பெற அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர்கள் தகுதியானவர்கள் எனவே அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதியோர் ஓய்வவூதியம் ஆகிய உதவித்தொகைகளை வரும் எட்டு வாரகாலத்திற்குள் வழங்குமாறு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கர்ணன் தமது தீர்ப்பில் கூறியுள்ளார் செய்தி;செ.பிரமநாயகம்-தென்காசி
தென்காசி அருகே அரசின் விலையில்லா பொருட் கள் வழங்கல்
தென்காசி: குணராமநல்லூர் வருவாய் கிராமத்தில் 3366 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் விழா நடைபெற்றது. குணராமநல்லூர் வருவாய் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் முருகேசன் தலைமை தாங்கினார். மண்டல துனை வட்டாட்சியர் எட்வர்ட், கல்லூரணி வருவாய் ஆய்வாளர் சிவன்பெருமாள் கீழப்பாவூர் யூனியன் துணை சேர்மன் உத்திர குணபாண்டியன், குணராமநல்லூர் பஞ் தலைவர் மாரிமுத்து, கல்லூரணி பஞ் தலைவர் தமிழ்செல்வன் என்ற ராமசாமி, சமக மாவட்ட செயலாளர்கள் அதியமன், துரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர் குணராமநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அருள் லிங்கம் வரவேற்றார். விழாவில் தென்காசி வட்டாட்சியர் சொர்ணராஜ் தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தார் , குணராமநல்லூர் வருவாய் கிராமங்களான கடபோகத்தி, குபேரபட்டணம், வேட்டைகாரன் குளம், கண்டமங்கலம், மேலமெஞ்ஞானபுரம், புளிச்சிகுளம், முப்புலியூர், புல்லுக்காட்டுவலசை, அருந்ததியர்புரம், மத்தளம்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3366 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது . விழாவில் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபாகர், நடராஜன், முகம்மது அப்துல் அலி, கிராம உதவியாளர் சங்கரவேல் அதிமுக பிரமுகர்கள் புல்லுக்காட்டு வலசை தமிழ்செல்வன், வேல்முருகன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனித்துணை வட்டாட்சியர் துரைப்பாண்டியன் நன்றி கூறினார். செய்தி : செ.பிரமநாயகம்-தென்காசி
அட… மே 1 ஆம் தேதி டாஸ்மாக் லீவுங்க…!
கரூர்: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1- ல் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளனர். மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்., வரும் மே-1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப் மற்றும் ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்படும். அன்று மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா என்கவுண்டர்: போலீஸ் விசாரணையில் நீதிமன்றம் அதிருப்தி
ஹைதராபாத்: ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ஆந்திர போலீஸாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி சிவில் உரிமைக் கழகமும், கொல்லப்பட்ட சசிகுமாரின் மனைவி முனியம்மாள் ஆகியோரும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது விசாரணை தொடர்பான போலீசாரின் டைரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 10 நாட்களுக்கு முன்பு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட பின்னரும், போலீஸாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாதது அதிருப்தி அளிக்கிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் மீது ஏற்கெனவே போலி என்கவுண்டர் புகார்கள் பல இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்னும் 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதில் போலீஸ் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும், சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. அடுத்த விசாரணை மே 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீனவர் வலையில் தண்ணீரில் மிதக்கும் அதிசயக் கல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது மீனவர் வலையில் தண்ணீரில் மிதக்கும் அதிசயக் கல் ஒன்று சிக்கியது. மணமேல்குடி அருகே உள்ளது பொன்னகரம் மீனவர் கிராமம். இங்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடலுக்கு சென்று மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர் ஒருவர் வலையில், மீன்களுடன் சேர்ந்து ஒரு கல்லும் வந்தது. அந்தக் கல்லை எடுத்து அவர் தண்ணீரில் வீசியபோது அந்தக் கல் மிதந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த அவர் அந்தக் கல்லை படகில் தூக்கிப் போட்டுக் கொண்டு கரைக்கு வந்தார். பின்னர் பொதுமக்களிடம் தண்ணீரில் கடலில் கண்டெடுக்கப்பட்ட மிதக்கும் கல் குறித்த அதிசயத்தை கூறினார். பின்னர் அந்தக் கல் அவ்வூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் வாசலில் உள்ள தெப்பக்குளத்தில் போடப்பட்டது. குளத்தில் போடப்பட்ட அந்தக் கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்தது. இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்து குளத்தில் மிதந்து கொண்டிருக்கும் அதிசயக் கல்லை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். செய்தி: பொ.ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை
சுங்கத்துறைக் கண்காணிப்பாளருக்கு 3 வருட சிறை; சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு
மதுரை: திருச்சி சுங்க துறை கண்காணிப்பாளராக இருந்தவர் ஜெயராஜ், இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக CBI வழக்கு பதிந்து மதுரை CBI நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் இவருக்கு 3 வருடம் சிறை தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், 35 லட்ச மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

