புது தில்லி: தமிழக நலத் திட்டங்களுக்கு உதவக் கோரி, தில்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். மேகதாது அணைப் பிரச்னை, முல்லைப் பெரியாறு, ஆந்திர என்கவுண்டர் என தமிழகத்தின் ஐந்து முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதற்காக அவர் தலைமையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு திங்கள்கிழமை தில்லி சென்றது. பின்னர் நரேந்திர மோடியை சந்தித்த கையோடு, விஜயகாந்த் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் நிலுவையில் உள்ள தேசிய சாலைத் திட்டங்கள், தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் நடைபெறும் மேம்பாலங்கள் மற்றும் திட்டங்களை விரைந்து முடிக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற விவாகரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து, அவரிடம் தமிழகத்தில் நிலுவையில் உள்ள நலத்திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றை காலதாமதம் இன்றி நிறைவேற்ற வலியுறுத்தினார். பின்னர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, ஆந்திராவில் 20 தமிழகர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்தார். பின்னர், நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தமிழக அரசின் ரூ.2 லட்சம் கோடி கடன் சுமைக்குத் தீர்வு காணவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் நிலுவையில் உள்ள நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கவும் வலியுறுத்தினார். தில்லியைச் சுற்றி வரும் விஜயகாந்த், தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளது என்பதைக் காட்டவும், அடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் துடிப்பாகக் களம் இறங்கவும் திடீரென இவ்வாறு களம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கோரிக்கைகளை முன்வைத்து தில்லியை சுற்றினாலும், கூட்டணி சார்பில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதை பாஜக தலைமையிடம் முன்வைக்கவும் இந்த பயணத்தை அவர் பயன்படுத்திக் கொண்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
தமிழக திட்டங்களுக்கு உதவக் கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்தார் விஜயகாந்த்
Popular Categories



