திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையோர ஹோட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மற்றும் பஸ்ஸுக்குக் காத்திருந்த 5 பேர் தறிகெட்டு வந்த பஸ் மோதி பரிதாபமாக பலியாகினர். மதுரையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் நேற்று இரவு 10 மணி அளவில் திருவண்ணாமலை நோக்கி வந்தது அந்த பஸ், திருக்கோவிலூர் கடந்து திருவண்ணாமலை நோக்கி தென்மாத்தூர் அருகே வந்தபோது, இன்று அதிகாலை பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தென்மாத்தூர் கூட்ரோடில் உள்ள முருகன் கோவில் அருகில் சாலையோரம் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது. அப்போது, ஓட்டலில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும், பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீதும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் தென்மாத்தூர் காமராஜ் நகரைச் சேர்ந்த சீமான் (70), ஏழுமலை (40), அருணாசலம் (55), ரங்கன், தென்மாத்தூர் ராமலிங்கம்(58) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(53), முனுசாமி(48), தாணல்(80) ஆகிய 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் முனுசாமி, தாணல் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்துக்குக் காரணமான ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 5 பேர் பலியான சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வெறையூர் போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிரைவரை தேடி வருகின்றனர். விபத்து குறித்து தகவலறிந்த அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், ஆட்சியர் ஞானசேகரன், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். செய்தியாளர்: வி.பாலாஜி, திருவண்ணாமலை
Popular Categories



