தில்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள ஜெயந்தி நடராஜன் ஒரு சந்தர்ப்பவாதி என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். ஜெயந்தி நடராஜன் கூறுவது பொய் என்று கூறியுள்ள மொய்லி, அமைச்சர்களின் பணியில் ராகுல் காந்தி ஒருபோதும் தலையிட்டதில்லை என்றார். ஓராண்டுக்கு பிறகு தற்போது வாய் திறப்பது ஏன் என்றும் வீரப்பமொய்லி, ஜெயந்தி நடராஜனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அமித் ஷாவை ஜெயந்தி நடராஜன் சந்திக்கவில்லை: பாஜக
புது தில்லி ஜெயந்தி நடராஜன், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்ததாக வரும் செய்திகள் பொய்யானவை, அவர் அமித் ஷாவை சந்திக்கவே இல்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. சென்ற வருடத்தில் சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அமித் ஷாவை மட்டுமல்ல.. எந்த ஒரு பாஜக தலைவரையும் சந்தித்துப் பேசவில்லை என்று அக்கட்சியின் தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்துள்ளார். முன்னதாக, அமீத் ஷாவை சந்தித்த பிறகுதான் ராகுல் காந்தி மீது புகார் கூறுகிறார் ஜெயந்தி நடராஜன் என்று ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது பாஜக தலைவர் அமீத் ஷாவை ஜெயந்தி நடராஜன் ரகசியமாக சந்தித்துப் பேசியதாகவும், இதனால் அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாக அந்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவரை பாஜகவில் சேர்க்க சில முக்கியத் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது இவர்களின் சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியானபோதும், எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால் இந்த சந்திப்பு நடந்த நிலையில்தான் காங்கிரஸை விட்டு இன்று விலகுவதாக ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தி மீதும் புகார் கூறியுள்ள அவர், சோனியா காந்திக்கு அனுப்பிய கடிதத்தையும் பத்திரிகையாளர் மத்தியில் வெளிப்படையாக அளித்துள்ளார். அவரின் இந்தச் செயல் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது. அவர் அமீத் ஷாவை சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவலும், அவரை பாஜகவுக்குள் கொண்டு வர சில முக்கியத் தலைவர்கள் விருப்பம் காட்டாமல் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இதற்கு, அவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட சில முடிவுகள் சர்ச்சைக்குரியதாக உள்ளதால் அவை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்பதால் ஜெயந்தியை சேர்ப்பதில் பாஜக அவசரம் காட்டாது என்பது காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் தனது முடிவுகளில் ராகுல் காந்தியின் தலையீடு இருந்ததாக ஜெயந்தி நடராஜன் வெட்ட வெளிச்சமாகக் கூறியிருப்பதால் ஜெயந்தியின் நோக்கம் என்ன என்பதும் கேள்விக்குரியதாகியுள்ளது.
ஜெயந்தி நடராஜன் – அரசியலில் இருந்து ஓய்வு முடிவு?
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியில் இருந்து விலகல் முடிவை அறிவித்த அவர், காங்கிரஸ் கட்சி தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார். கட்சியில் தம்மை ஒரங்கட்டுவதாகவும், அமைச்சக விவகாரங்களில் தலையிட்டதாக ராகுல் காந்தி மீதும் அவர் புகார் கூறியுள்ளார். விலகல் முடிவை அறிவித்த அவர், எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன் என்றும் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேருவது பற்றி மறுபரிசீலனை செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளதாக விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. முந்தைய ஐ.மு.கூட்டணி அரசில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். கடந்த 2013 டிசம்பரில் திடீரென பதவி விலகினார். நானே தான் ராஜினாமா செய்கிறேன், எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றும் அப்போது அவர் கூறியிருந்தார். கட்சிப் பணிகளில் ஈடுபட வசதியாக அவர் ராஜினாமா செய்ததாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, புதிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையிடம் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். இது, அப்போது பலரின் புருவத்தை உயர்த்த வைத்தது. ஜெயந்தி நடராஜன் ராஜினாமா பின்னணியில் அவரது அமைச்சகத்தில் நிலவும் தாமதத்தைத் தவிர்க்கவும், செயல்படும் நிலையை விரைவாக்கவும் ராகுல் காந்தியின் திட்ட நோக்கமாக விளம்பரப் படுத்தப் பட்டது. இவ்வாறு, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஜெயந்தி நடராஜன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதன் பின்னர் கட்சி செயல்பாடுகளிலிருந்து அவர் ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில், அவர் கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் “நான் ஏன் அமைச்சர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணம் இன்று வரை எனக்குத் தெரியாது” என குறிப்பிட்டுள்ளார். இதுவே இப்போது ஒரு முரண்பாடான நிலையை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக தான் எடுத்த முடிவுக்கு தேசியத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என்றும் மாநில நிர்வாகிகளுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என்றும் அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் முன்னர் எழுதிய கடிதத்திலும், 30 ஆண்டு காலமாக எனது களங்கமற்ற அரசியல் வாழ்க்கைக்கும், என் குடும்பப் பெருமைக்கும் ஊறு விளைவிப்பதுபோல் ஊடகங்களில் என் மீது விமர்சனங்கள் எழ மேலிட நெருக்கடிக்கு நான் வளைந்து கொடுக்காததே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் திட்டமிட்டு தம்மைப் பற்றிய அவதூறுகள் ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். ஜெயந்தி நடராஜனுக்கு பாரம்பரிய குடும்பப் பின்னணி உண்டு. முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் பேத்தியான இவர், பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். வழக்குரைஞரான இவர், 1986, 1992 ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய போது தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மூப்பனாரின் த.மா.கா., கட்சியில் இணைந்தார். 1997 ஆம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, சோனியா காந்தியால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். 2011 ஜூலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஜெய்ராம் ரமேஸுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். இப்போது காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ள இவர், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் அல்லது பாஜக.,வில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் தான் எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். நான் ஒரு கசப்பான சூழலில் இருக்கிறேன். காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த என்னை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்து, புறக்கணித்துள்ளது. அந்தக் கசப்புணர்வில் இருந்து நான் விடுபட சற்று கால அவகாசம் வேண்டும் என்று இவர் கூறியுள்ளதால், பின்னாளில் வேறு கட்சியில் இணைந்து செயல்படவும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தற்போதைய அவர் பேச்சில் இருந்து, தாம் அரசியல் களத்தில் இருந்து ஓய்வு பெறும் முடிவிலேயே இருப்பது போல் வெளிக்காட்டியுள்ளது தெரிகிறது.
இணைய ஆட்சிமுறை மாநாட்டுக்காக பிரதமர் மோடி டுவிட்டரில் உரை
சமூக ஊடகம் சமீபத்திய தொழில்நுட்ப முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்தும் செல்லும் வகையில் 18-வது தேசிய இணைய ஆட்சிமுறை மாநாட்டிற்கு டுவிட்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை. இது போன்ற ஒரு உரை டுவிட்டர் மூலம் நடப்பது இதுவே முதல் முறை. டுவிட்டரில் பிரதமர் எழுதியுள்ளது: “வணக்கம் நண்பர்களே!. டுவிட்டர் மூலம்18-வது தேசிய இணைய ஆட்சிமுறை மாநாட்டில் இணைவதை நினைத்து நான் பெருமையடைகிறேன். நான் தனிப்பட்ட முறையில் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பினேன், ஆனால் முடியவில்லை. எனினும், நான் உங்களோடு உரையாடும் வாய்ப்பை தவற விடமாட்டேன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் உங்களோடு இணைவது எவ்வாறு என்று நான் சிந்தித்தேன். அப்போது தான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ஊடகம் மூலம் உங்களுடன் பேச முடிவெடுத்தேன். இந்த மாநாட்டில், மத்திய அரசு, மாநில அரசு, ஆயுதப் படைகள், கல்வி நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் என பல்வேறு துறையின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள் என்று சொன்னார்கள். மேலும், 12 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்படுகிறது’ என்றும் கோரினார்கள். நான் எல்லா விருது வென்றவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். அவர்களது முயற்சிகளைப் பாராட்டுகிறேன். வெற்றியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதோடு அவர்களின் முயற்சிகளை பாராட்டுகிறேன். குறிப்பாக இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் இணைய ஆட்சிமுறை, திறன் மேம்பாடு,வேலைவாய்ப்பு திறனை மையாமாக கொண்டுள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்தியாவை ஒரு கணினி அறிவு பெற்ற சமூகமாகவும் அறிவு சார் பொருளாதாரம் உள்ள நாடுகவும் மாற்ற வேண்டும் என்ற ‘டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் கனவை நினைவாக்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ளது. நாட்டு மக்களின் நலனுக்கும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் வலுவான கணினி உள்கட்டமைப்பை உருவாக்க நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.. “டிஜிட்டல் மைய இந்தியா” எனும் கனவு திட்டத்தின் முக்கிய அங்கம் இணைய ஆட்சிமுறை. நம் நாட்டின் ஆட்சிமுறையில் நாம் எவ்வளவு தொழில்நுட்பத்தை கொண்டுவருகிறோமோ அவ்வளவு நல்லது. தொழில்நுட்பம் மற்றும் இணைய ஆட்சிமுறைகள் செயல்முறைகளை எளிமையாக்கும்.நடைமுறை மற்றும் முன்னேற்ற வேகத்தை குறைக்கும் பல தடைகளையும் இது தகர்த்தெறியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். . இணைய ஆட்சிமுறையை நாம் பார்க்கும்போது முதலில் கவனிக்க வேண்டியது செல்பேசிதான். அதனால் செல்பேசி ஆட்சிமுறைக்கு முக்கியத்துவம் அளியுங்கள். முடிந்தவரை செல்பேசி மூலம் பல சேவைகளை வழங்கும் வழிகளை கண்டறியும்படி நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். நமது செல்பேசியில் உலகத்தை கொண்டுவருவோம். நம் நாட்டில் உள்ள இளைஞர்கள்தான் நமது முக்கிய சொத்து. அவர்களுக்கு தொழில்நுட்பம் மூலம் திறன் மேம்பாட்டை அளிப்பது அவசியம். இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு தற்போதுள்ள தொழில்நுட்பமும் அதன் சிறப்பான பயன்பாடும் அதிகமாக தேவைப்படுகிறது. அதற்குத் தேவையான பணிகளை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவோம். இந்த அனைத்து இந்திய மாநாடு, அடுத்து வரும் ஆண்டுகளில் நமது நாட்டிற்கு உதவக்கூடிய பல்வேறு புதிய முயற்சிகளை ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என்று நான் நம்புகிறேன். மாநாட்டில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துகொள்கிறேன். நன்றி!. சமீபத்தில், அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வருகை தந்தபோது “சவுண்ட் கிளவுட்” மூலம் “மனதின் குரல்” நிகழ்ச்சியை பிரதமர் பகிர்ந்துகொண்டார். ஜனவரி 28 ஆம் தேதி தேசிய மாணவர் படை அனுவகுப்பில் பிரதமர் ஆற்றிய உரையை அவர் முகநூல் மற்றும் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். (தகவல்: பி.ஐ.பி)
காங்கிரஸ் தூய்மையாகிறது; ஜெயந்தி நடராஜன் வழியில் வாரிசுடன் ‘ப.சிதம்பர’மும் வெளியேறினால் நல்லது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் விலகலால் காங்கிரஸ் தூய்மையடைந்து வருகிறது; வாரிசுடன் இன்னொருவரும் (ப.சிதம்பரம்) வெளியேறினால் காங்கிரஸுக்கு விமோசனம் பிறக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த திருமதி. ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறர். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த இவர் கடந்த டிசம்பர் 2013 இல் பதவியை விட்டு விலகினர். கடந்த 13 மாதங்களாக மத்திய அமைச்சரவையிலிருந்து ஏன் விலகினேன் என்று எந்த விளக்கமும் கூறாமல் இருந்த ஜெயந்தி நடராஜன் தற்போது காங்கிரஸ் தலைமை மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளர். பதவி விலகும் போது வராத ஞானோதயம் இப்போது திடீரென்று ஞானோதயம் பீறிட்டு கிளம்பியிருக்கிறது. இது மோடியின் அறிவுரையால் ஏற்பட்டதா ? மோடியின் பயமுறுத்தலால் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த ஜெயந்தி நடராஜன் திடீரென்று ஏற்பட்ட அரசியல் விபத்தின் காரணமாக 1984 இல் காங்கிரசில் சேர்நத இவர் 1986 முதல் 2013 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்pனராக தொடர்நது பதவி சுகத்தை அனுபவித்து வந்தர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொண்டோ, சேவையோ செய்யாமல் தொடர்நது 27 ஆண்டுகாலமாக மாநிலங்களவை உறுப்pனராக இருந்து கின்னஸ் சாதனையை படைத்தவர் தான் ஜெயந்தி நடராஜன். காங்கிரசிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது, அன்றைய பிரதமர் ஐ.கே. குஜ்ரால் அவர்களிடம் கெஞ்சி, கூத்தாடி அங்கேயும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து பதவியை அனுபவித்ததை யாரும் மறந்துவிட நான்கு தலைமுறையாக இவரது குடும்பம் காங்கிரசுக்கு உழைத்ததாகக் கூறுகிறர். இவரது மூதாதையர்கள் காங்கிரசுக்கு உழைத்தது எவ்வளவு உண்மையோ, அதேபோல 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்ட்டதற்கும் இவரது குடும்பம் தான் காரணம் என்பதை எவருமே மறுக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜர் கடுமையான உழைப்pன் மூலம் பொற்கால ஆட்சியில் நிகழ்த்தப்ட்ட சாதனைகளை எல்லாம் மூன்றே ஆண்டு முதலமைச்சர் பதவி மூலமாக படுகுழிக்கு தள்ளிய பாவத்தை செய்தவர்கள் யர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்கள். இவரது தாத்தா பெரியவர் பக்தவச்சலம் ஆட்சிக்காலத்தில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிட்டுக் குருவிகளை சுட்டுத் தள்ளுவது போல தமிழ் உணர்வாளர்களை சுட்டுத் தள்ளினர். அதுமட்டுமல்லாமல், கிடங்கில் சேமிக்கப்ட்ட அரிசியை உரிய நேரத்தில் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யாத காரணத்தால் தான் 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது. காங்கிரசை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிற ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினர் சர்பாக கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் காங்கிரசை விட்டு விலகியதால் இனி, காங்கிரசுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. அதற்காக உங்களுக்கு எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தகும். மறைந்த தலைவர் ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியேர் வைத்த நம்பிக்கைக்கும், பாசத்திற்கும் நீங்கள் செய்த கைமாறு இதுதானா ? பதவி விலகுகிற போது அப்பழுக்கற் காங்கிரஸ் தலைவர்கள் மீது சேற்றை வரி இறைக்கிறீர்களே, இதைவிட நன்றிகெட்ட செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா ? உங்களை யர் மன்னித்தாலும், காங்கிரஸ் கட்சியிலிருக்கிற தொண்டர்கள் எவரும் மன்னிக்க மாட்டார்கள். கங்கை தூய்மைப்ப டுகிறதோ இல்லையோ, தாங்கள் காங்கிரசை விட்டு விலகியதால் இனி காங்கிரஸ் கட்சி மேலும் பலமடங்கு தூய்மைப்படும். இன்னும் ஒருவர் தமது வாரிசோடு வெளியேறினால் தமிழக காங்கிரசுக்கு நிச்சயம் விமோசனம் ஏற்படும். ஏனெனில் கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக பத்தாண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும், மக்களை சந்திக்க பயந்து ஓடி ஒளிந்த போது காங்கிரஸ் தொண்டர்கள் எவ்வளவு வேதனைப்ட்டர்கள் என்பதை வர்த்தைகளால் வடிக்க இயலாது. தியாகிகளை காங்கிரஸ் என்றைக்குமே மதித்திருக்கிறது. துரோகிகளையும், சந்தர்பவாதிகளையும் காங்கிரஸ் கட்சி தூக்கி எறிய எப்போதும் தயங்கியதில்லை. அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் நீங்களாகவே வெளியேறியதற்கு மீண்டும் நன்றியை தெரிவித்து, எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துகிறேன்.
சோனியா கட்டளையிட்டு மன்மோகன் உத்தரவிட்டு ராஜினாமா செய்தேன்: ஜெயந்தி நடராஜன் பரபரப்பு கடிதம்
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டதால் மத்திய அமைச்சராக இருந்த தம்மை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார் என்று ஜெயந்தி நடராஜன் எழுதியிருக்கும் பரபரப்புக் கடிதம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மத்திய அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் திடீரென அமைச்சர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். பின்னர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், அவர் பாஜக.,வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. அப்போது, கடந்த நவம்பர் 5-ல் ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில் தாம் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது, ராகுலால் தமக்கு ஏற்பட்ட சிக்கல்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்தக் கடிதத்தில்… “தாங்க முடியாத மனவேதனையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 30 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் விசுவாசமாக கட்சிக்காக உழைத்திருக்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக 4 தலைமுறைகளாக பாடுபட்டு வருகிறோம். நான் 4வது தலைமுறையைச் சேர்ந்தவர். 3 தலைமுறைகளுக்கு முன்பு எனது குடும்பத்தினர் நாட்டு விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தவர்கள்.. நாடு விடுதலை அடைந்த பின்னர் காங்கிரஸ் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் எங்களை அர்ப்பணித்துக் கொண்டோம். என்னுடைய தாத்தா தமிழக முதல்வராக இருந்தவர். என்னுடைய அத்தை ஓய்வில்லாத சமூக சேவகர். 1984 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறேன். 4 முறை எம்.பி.யாக, இணை அமைச்சராக பணியாற்றி இருக்கிறேன். நான் நாட்டுக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்திருக்கிறேன். கடந்த 30 ஆண்டுகாலத்தில் என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. கடந்த 2013 டிசம்பர் 20-ஆ,ம் தேதியன்று பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தன்னுடைய அலுவலகத்துக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அவரது அலுவலகத்துக்குச் சென்ற போது அவர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று இதைத்தான் என்னிடம் சொன்னார்.. “ஜெயந்தி, உங்களது சேவை கட்சிக்கு தேவை என்று காங்கிரஸ் தலைவர் (சோனியா) என்னிடம் கூறியுள்ளார்” என்றார். எனக்கு இது புதிராக இருந்தது. “ஓகே சார்.. நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டேன். “அவர் (சோனியா) நீங்கள் ராஜினாமா செய்ய விரும்புகிறார் என்றார்.. அதிர்ச்சியடைந்த நான் ” ராஜினாமாவா சார்?” என்றேன். மேலும் “எப்போது” என்றும் கேட்டேன்.. அதற்கு அவர் ” இன்று” என்று கூறினார். நான் மீண்டும் ‘இது காங்கிரஸ் தலைவர் (சோனியா) விருப்பமா? என்று கேட்டேன். நான் மறுபேச்சு பேசவில்லை. உங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்திருந்தேன். கட்சிப் பணிக்காக என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் பின்னர் உங்களை சந்திக்க நேரம் கேட்டேன். இருப்பினும் உங்களிடம் தொலைபேசியில் பேச முடிந்தது. அப்போது, பிரதமர் மன்மோகன்சிங் கூறியதை மீண்டும் உங்களிடம் கூறினேன். நீங்கள் கட்சிப் பணிக்காக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினீர்கள். அதன் பின்னர் அரை மணி நேரத்தில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து என்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன். அதை பிரதமர் மன்மோகன் சிங் உடனே ஏற்றும் கொண்டார். நான் ராஜினாமா செய்த மறுநாள் ஊடகங்களில் அது தலைப்புச் செய்தியாக வெளியானது. நான் கட்சிப் பணிகளுக்காகத்தான் ராஜினாமா செய்திருக்கிறேன் என்று முதலில் அனைத்து ஊடகங்களுமே செய்திகள் வெளியிட்டன. ஆனால் பிற்பகலில் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.. ராகுல் காந்தி அலுவலகத்தில் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து நான் கட்சிப் பணிக்காக ராஜினாமா செய்யவில்லை என்கிற மாதிரியான செய்திகளை வெளியிடுமாறு கூறப்பட்டதாக எனக்கு தகவல்கள் கிடைத்தன. அதன் பிறகு ஊடகங்கள் எனக்கு எதிரான செய்திகளை வெளியிட்டன. நான் ராஜினாமா செய்த அதே நாள் தில்லியில் நடைபெற்ற ஃபிக்கி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சுற்றுச்சூழல் அனுமதியின் பெயரால் தொழில்திட்டங்கள் தாமதமாவதாகவும் இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் பேச்சை யூ டியூப்பில் முழுமையாக கேட்டேன். அதன் பிறகு ஃபிக்கி கூட்டத்தில் தொழிலதிபர்களிடம் பேசுவதற்கு ஏதுவாகத்தான் உங்களை ராஜினாமா செய்யச் சொன்னார்களா? என்றும்கூட சில பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி கேட்டனர். என்னைப் பொறுத்தவரையில் சுற்றுச் சூழல்பாதுகாப்பு விஷயத்தில் இந்திரா காந்தியும் ராஜிவ் காந்தியும் கடைப்பிடித்த அணுகுமுறையைத்தான் பின்பற்றினேன். எந்த ஒரு திட்டத்தையும் தாமதப்படுத்தும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை. இதை என்னால் எப்போதும் நிரூபிக்க முடியும். இது தொடர்பாக ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பினேன். நான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டது, அவரது ஃபிக்கி பேச்சு குறித்து குறிப்பிட்டுவிட்டு நான் செய்த தவறு என்ன என்றும் கேட்டிருந்தேன். அவரை சந்திக்கவும் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டேன். ஆனால் அதற்கு பதில் ‘லிட்டில் பிசி” என்பதாகத்தான் இருந்தது. தற்போது வரை ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை. அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உங்களைச் சந்திக்க எனக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அப்போது, என் மீதான அவதூறுகள் குறித்து உங்களிடம் விவரித்தேன். அதற்கு, தேர்தல் வருகிறது.. அதனால் உங்களது பணி கட்சிக்கு தேவை என்று கூறினீர்கள். என்னுடைய ராஜினாமா குறித்து பத்திரிகைகள் பல்வேறு யூகங்களுடன் எழுதுவதாக கூறினேன். அப்போது, பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டாம் என்று நீங்கள் கூறினீர்கள். இன்று வரை அதை நான் மதித்து கடைபிடித்து வருகிறேன். ஆனால் இந்த நாள் வரை எனக்கு எந்த ஒரு கட்சிப் பணியும் ஒதுக்கப்படவும் இல்லை.. உங்களை சந்திக்க பல முறை அனுமதி கேட்டும் நேரமும் ஒதுக்கப்படவும் இல்லை. அதன் பிறகு ஜனவரி மாதம் காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் அஜய் மக்கானிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் பட்டியலில் இருந்து உங்களது பெயரை நீக்கிவிட்டோம் என்ற அதிர்ச்சி தகவலை என்னிடம் கூறினார். அத்துடன் இது மேலிட முடிவு என்றும் வேறு பணிகள் உங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறினார். 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக கடினமான சூழல்களில் கட்சியின் செய்தித் தொடர்பாளராக பணிபுரிந்து இருக்கிறேன். அதுவும் என்னுடைய தாயார் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும்கூட டெல்லிக்கு சென்று ஒரு எம்.பியாக கூட இல்லாமல் கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய குடும்பம், என்னுடைய பெற்றோர், என்னுடைய கணவர் அனைவருமே காங்கிரஸ் கட்சிக்காக தியாகம் செய்திருக்கிறோம். அமைச்சர் பொறுப்பில் 2 ஆண்டு காலம்தான் இருந்திருக்கிறேன்.. ஆனால் இரவு பகல் பாராமல் 30 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்திருக்கிறேன். மன்மோகன்சிங்கும் நீங்களும் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நான் ஆற்றிய பணிகளை பாராட்டியிருக்கிறீர்கள். 10 ஆண்டுகால செய்தித் தொடர்பாளர் பணியில் ஒரு தவறுகூட இழைத்ததும் இல்லை. இதுவரை என்னை செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவும் இல்லை. 20013ஆம் ஆண்டு நவம்பர் 16-ந் தேதியன்று அஜய் மக்கான் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது நான் வெளியூர் பயணத்தில் இருந்தேன். உடனடியாக டெல்லி வந்து இளம்பெண்ணை மோடி உளவு பார்த்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்குமாறு கூறினார். அப்போது நான் அமைச்சராகவும் இருந்தேன். ஆனால் நான் இதை ஏற்க மறுத்தேன். இருப்பினும் மேலிட முடிவு என்று மக்கான் கூறினார். இவ்வளவுக்குப் பிறகும் உங்களது அறிவுறுத்தலை ஏற்று நான் அமைதியாகவே இருந்தேன். ஜி.கே.வாசன் காங்கிரஸை விட்டு விலகி தனிக் கட்சி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மோதிலால் வோரா என்னை தொலைபேசியில் அழைத்தார். வாசன் விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு என்ன என்று கேட்டார். ஜி.கே.வாசன் விலகும் வரை என்னிடம் யாரும் எதுவும் பேசவில்லை. ஐ.மு. கூட்டணி அரசின் பொருளாதார பிரச்சனைகளுக்கு நான் பலிகடாவாக்கப்பட்டேன். இத்தனைக்கும் பிறகுதான் உங்களுக்கு கடிதம் எழுத முடிவு செய்தேன். – இவ்வாறு ஜெயந்தி நடராஜன் அக்கடிதத்தில் கூறியுள்ளார். இதனிடையே மத்திய அமைச்சரை நியமிப்பதும் நீக்குவதும் பிரதமருக்கு உள்ள அதிகாரம்; அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா எப்படி தலையிட்டார் என்பதை ஜெயந்தி நடராஜனின் கடிதம் அம்பலப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
காங்கிரஸில் இருந்து விலகுவதாக ஜெயந்தி நடராஜன் அறிவிப்பு: ராகுல் காந்தி காரணம் என்கிறார்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜெயந்தி நடராஜன் இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன் மன உளைச்சலுக்குக் காரணம் என்று கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயந்தி நடராஜன் திடீரென 2013ஆம் ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது லோக்சபா தேர்தல் பணிக்காக ஜெயந்தி ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்தும் ஜெயந்தி நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஜெயந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். இந்நிலையில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஜெயந்தி நடராஜன் எழுதிய கடிதம் ஒன்று ஊடகங்களில் இன்று வெளியாகி இருந்தது. அதில் தாம் கட்சிக்காக பாடுபட்ட விதம், தம்மை ராஜினாமா செய்ய சொன்னபோது நடந்தது என்ன? ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் மீதான அதிருப்தி என விவரிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த ஜெயந்தி நடராஜன், தாம் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றிருந்தவற்றை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் கட்சிப் பணிக்காக ராஜினாமா செய்த தம் மீது ராகுல் காந்தியால் அவதூறான செய்திகள் பத்திரிகைகள் மூலம் பரப்பப் பட்டன என்றும் ஜெயந்தி நடராஜன் குற்றம் சாட்டினார். அத்துடன் தாம் இணைந்தபோது இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும் ஜெயந்தி நடராஜன் அறிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை பொறுப்பில் இருந்தும் விலகுவதாகக் கூறிய அதே நேரத்தில், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலோ பிற கட்சியிலோ தற்போது இணையும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள புதிய அரசு மீது நம்பிக்கையில்லை: சி.வி. விக்னேஸ்வரன்
இலங்கைத் தமிழர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொள்ள முடியாத நிலை உள்ளதாக அந்நாட்டின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூகோ ஸ்வைர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் சென்று முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசினர். அப்போது, வடக்கில் இராணுவத்தை குறைக்காமல் மீள்குடியேற்றம் சாத்தியமில்லை என்றும், இந்த நிலைமை தமிழ் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இங்கிலாந்து குழுவிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். இதனிடையே, இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் சுன்னாகம் அகதிகள் முகாமிற்கு சென்று பார்வையிட்டனர். உயர் பாதுகாப்பு வளையம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிரச்னைகள் குறித்தும் இங்கிலாந்து குழுவினர் கேட்டறிந்தனர்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 29 ஆக உள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது 34 ஆக இருந்தது வேட்பாளர்களின் எண்ணிக்கை. வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ள கடைசி நாளான இன்று சுயேட்சைகள் 5 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். இதை அடுத்து களத்தில் 29 பேர் உள்ளனர். இவர்களில் திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்களும் அடங்குவர்.
பன்னாட்டு உணவு நிறுவனங்களிடம் ரயில்களை அடகு வைக்கக் கூடாது: ராமதாஸ்
பன்னாட்டு நிறுவனங்களிடம் ரயில்களை அடகு வைக்கக் கூடாது என்று பாமக ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை… தொடர்வண்டித் துறை வருவாயை பெருக்கும் நோக்குடன் பல்வேறு திட்டங்களை அத்துறைக்கான அமைச்சகம் வகுத்துள்ளது. தொடர்வண்டிகளுக்கு தனியார் நிறுவனங்களின் பெயர்களைச் சூட்டுதல், தொடர்வண்டிகள் மற்றும் தொடர்வண்டி நிலையங்களில் விளம்பரங்களைச் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தல் ஆகியவை அரசின் திட்டங்களில் முக்கியமானவை ஆகும். தொடர்வண்டித் துறை வகுத்துள்ள திட்டங்களின்படி ராஜ்தானி, சதாப்தி, மற்றும் துரந்தோ விரைவுத் தொடர்வண்டிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் பெயர்கள் சூட்டப்படவுள்ளன. பெப்சி ராஜ்தானி, கோகோ&கோலா சதாப்தி என தொடர்வண்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்ள கோடிக்கணக்கில் பணம் தருவதற்கு இந்த நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை பெறும் நிறுவனங்களுக்கு தொடர்வண்டிகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் விளம்பரம் செய்யும் உரிமை வழங்கப்படும். அதேபோல் தொடர்வண்டி நிலையங்களுக்கு விளம்பரதாரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி சென்னை சென்ட்ரல் நிலையத்தின் விளம்பரதாரராக மெக்டொனால்டு நிறுவனம் நியமிக்கப்பட்டால், அதன் பெயர் மெக்டொனால்டு சென்னை சென்ட்ரல் என்று பெயர் மாற்றம் செய்யப்படும். அதன்பின் அந்த தொடர்வண்டி நிலையம் மற்றும் தொடர்வண்டி மேம்பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் விளம்பரம் செய்யும் உரிமை மெக்டொனால்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும். இதன்மூலம் தொடர்வண்டிகளிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் பெப்சி, கோக், பிட்சா, சிப்ஸ் வகைகள், பொறித்த கோழி உணவுகள் ஆகியவை குறித்த விளம்பரங்களை மட்டுமே காண முடியும். மேலும் பயணிகளிடம் மறைமுகமாக கட்டணம் பெறப்பட்டு இவை அனைத்தும் அவர்களுக்கு தரப்படும். தொடர்வண்டித்துறை சொத்துக்களைப் பயன்படுத்தி, அதன் நிதி நிலையை மேம்படுத்துவது குறித்து பரிந்துரை அளிப்பதற்காக தொடர்வண்டி வாரியத்தின் போக்குவரத்துப்பிரிவு உறுப்பினர் டி.பி. பாண்டே தலைமையில் கடந்த மாதம் பணிக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு தான் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தொடர்வண்டித்துறை அமைச்சராக லாலுவும், இணையமைச்சராக பா.ம.க.வைச் சேர்ந்த அரங்க.வேலுவும் பதவி வகித்த 5 ஆண்டு காலத்தில் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஒருமுறை கூட கட்டணத்தை உயர்த்தாமல் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை சேர்த்து வைத்திருந்தனர். ஆனால், இப்போது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 3 முறை கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் தொடர்வண்டித்துறை நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்றால் அதற்குக் காரணம் தலைமையின் நிர்வாகத் திறமையின்மை தானே தவிர வேறொன்றுமில்லை. நிதி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கத்துடன் வருவாயை பெருக்குவதற்காக தொடர்வண்டித்துறை மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளைக் கூட குறை கூற முடியாது. ஆனால், இந்த முயற்சியில் விளம்பரதாரர்களாக தொடர்வண்டித் துறை தேர்ந்தெடுக்கவுள்ள நிறுவனங்கள் மிகவும் மோசமானவை; இவற்றின் உற்பத்திப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. பெப்சி, கோகோ&கோலா போன்ற குளிர்பானங்கள் உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தக்கூடியவை என்று எண்ணற்ற ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. இந்த குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளும் கலந்திருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. பிட்சா மற்றும் பொறித்த உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமான கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோய், இதய நோய், புற்றுநோய் போன்ற உயிருக்கு உலைவைக்கும் தொற்றா நோய்களை இவ்வகை உணவுப்பொருட்களும், குளிர்பானங்களும் தான் ஏற்படுத்துகின்றன. கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உயிரிழப்புகளில் 53% சாவுகளுக்கு தொற்றாநோய்கள் தான் காரணமாக இருந்தன. இது 2020 ஆம் ஆண்டில் 57% ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வகை உணவுப்பொருட்களின் விற்பனையை முறைப்படுத்துவதற்காக தில்லி உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பணிக்குழு கடந்த 16.01.2014 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து 500 கெஜம் சுற்றளவில் இத்தகைய குளிர்பானங்களையும், உணவுப்பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. சிகரெட் விற்பனைக்குக் கூட 100 கெஜம் சுற்றளவுக்கு மட்டுமே தடை உள்ள நிலையில், 500 கெஜம் சுற்றளவுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதிலிருந்தே இவற்றின் தீமையை உணர்ந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, இந்த வகை குளிர்பானங்கள் மற்றும் உணவு வகைகளின் விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும்; குழந்தைகளுக்கு விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையமும், உலக சுகாதார அமைப்பும் அறிவுறுத்தியுள்ளன. இத்தகைய சூழலில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் குளிர்பானங்கள் மற்றும் பொறித்த உணவு வகைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பெயர்களில் தொடர்வண்டிகளை இயக்குவதும், திரும்பிய திசைகள் அனைத்திலும் இந்த விளம்பரங்களை அனுமதிப்பதும், இதற்கெல்லாம் மேலாக அனைத்துப் பயணிகளுக்கு இவற்றை வழங்க அனுமதிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். தொடர்வண்டித்துறையின் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவில் குழந்தைகளை நீரிழிவு நோய், இதயநோய், புற்றுநோய் போன்ற தொற்றாநோய்கள் அதிக அளவில் தாக்கக் கூடும். தொடர்வண்டித்துறையை நலிவு நிலையிலிருந்து மீட்பதற்காக அதில் பயணம் செய்யும் பயணிகளை நோயாளிகளாக்குவது சரியான அணுகுமுறை தானா? என சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். உயிரைப் பறிக்கும் பன்னாட்டு உணவு நிறுவனங்களிடம் தொடர்வண்டித்துறையை அடகுவைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக தொடர்வண்டிகளையும், அதன் சொத்துக்களையும் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தி வருவாய் ஈட்டும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.

