புதுதில்லி: மத்திய ஆயுத படை தேர்வு 2014-கான நேர்காணல் வரும் பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ளது. உதவி கமாண்டன்ட் பதவிக்காக நடத்தப்படும் இந்த நேர்காணல் புது தில்லியில் உள்ள மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைப்பெறும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், அவர்களுக்கான அழைப்பு கடிதத்தை இந்த தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அழைப்பு கடிதத்தில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லை என்றாலோ புகைப்படம் சரியாக தெரியவில்லை என்றாலோ, அவர்கள் நேர்காணலுக்கு வரும்பொழுது வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் என ஏதாவது ஒரு புகைப்பட அடையாள அட்டையை கொண்டுவரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 23381125, 23098543, 23385271 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என்று மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை ரூ. 1.35 கோடி நன்கொடை
புதுதில்லி: பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை சார்பாக ரூ. 1.35 கோடி நன்கொடை அளிக்கப்பட்டது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் தலைமை நிர்வாக இயக்குநர் மனோஜ் சொந்தாலியா இன்று பிரதமரை நேரில் சந்தித்து இந்த நன்கொடைக்கான காசோலையை அளித்தார்.
தியாகிகள் தினம்: மகாத்மா காந்தி உட்பட பல்வேறு தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி
புதுதில்லி: தியாகிகள் தினத்தை முன்னிட்டு நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மகாத்மா காந்திக்கும் பல்வேறு தியாகிகளுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். “தேச தந்தைக்கு எனது அஞ்சலி: தியாகிகள் தினத்தன்று நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து தியாகிகளுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் வீரமும் தைரியமும் நம்மை எப்போதும் ஊக்குவிக்கும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆலங்குளம் அருகே அரசு பஸ் லாரி மோதல் டிரைவர்கள் உள்பட 4 பேர் பலி: 40 பேர் காயம்
திருநெல்வேலி அடுத்த ஆலங்குளம் அருகே அரசு பேருந்து லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வண்டிகளின் டிரைவர் உள்பட 4 பேர் பலியாயினர். தென்காசி பஸ்நிலையத்தில் இருந்து அரசு விரைவுப்பேருந்து நேற்று மாலை திருநெல்வேலி புறப்பட்டு சென்றது. ஆலங்குளம் அடுத்த மாறாந்தை கிராமத்தின் அருகே வந்தபோது எதிரே லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பஸ்சில் இருந்த 40க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் பொன் சண்முக குமார் (42), லாரி டிரைவர் மகேஷ் (35), தென்காசி அரசுப்பள்ளி ஆசிரியை புனிதா (42). மற்றும் 65 வயது மூதாட்டி வள்ளி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இந்த சோக சம்பவத்திற்கு இடையே விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ரோட்டில் சென்ற அரசு பஸ்சில் டீசல் டேங்க் திடீரென தீப்பிடித்தது. இதை அறிந்ததும் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.. ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததனர். இதில் தேவகி (40) என்ற பயணிக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஆலங்குளம் அருகே நேற்று மாலை அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி தென்காசி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரு வேறு விபத்துகள் குறித்து சீதபற்றநல்லூர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
மதசார்பின்மை, சோஷலிச வார்த்தைகள் விவகாரம்: சர்ச்சையிலிருந்து விலகியிருக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு
மும்பை: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 1976ல் இந்திரா காந்தியால் சேர்க்கப்பட்ட மத சார்பின்மை, சோஷலிஸம் என்ற வார்த்தைகள் தற்போது குடியரசு தினத்தை ஒட்டி வெளியான அரசியலமைப்புச் சட்ட முகவுரை குறித்த விளம்பரத்தில் விடுபட்டு வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சர்ச்சைகளில் இருந்து விலகியிருக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட முகவுரையில் இருந்து மதச்சார்பின்மை, சோஷலிஸம் ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் எம்.பி., சஞ்சத் ராவுத் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். இந்நிலையில், இந்த சர்ச்சைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கருதுகிறது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது… “இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்து தகுதியானதாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. இந்த விவகாரத்தில் சர்ச்சையைக் கிளப்பி விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள், சரியான நோக்கத்துடனும் ஆழந்த விவரங்களோடும் ஈடுபடுகிறார்களா என்று எங்களுக்குத் தோன்றவில்லை. அப்படி இருக்கும் போது, இந்த சூழ்நிலையில் எதுவும் பேசாமல் இருப்பதுதான் சரியானது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறியுள்ளார். சிவசேனா எம்பி., சஞ்சய் ராவுத் இது குறித்துக் கூறிய போது, “இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு கிடையாது. பாகிஸ்தான் இஸ்லாம் நாடு என்று இருக்கும்போது, இந்தியா ஹிந்து நாடாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கூறும் ஹிந்து ராஷ்டிரத்தை ஒட்டி வந்தாலும், சிவசேனாவின் இந்த வார்த்தைக் கட்டுமானத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்கவில்லை. தாங்கள் கூறும் ஹிந்து ராஷ்ட்ரம் என்ற கொள்கை சிவசேனாவின் கருத்தில் இருந்து வேறுபட்டது என்று கூறுகிறது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் கூறியபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை புகுத்தப்படுவதற்கு முன்பும் பின்பும் ஆர்.எஸ்.எஸ் இதையே வலியுறுத்தி வருகிறது. அனைத்து மதங்களின் பாலும் இந்திய சமூகத்துக்கு ஒரு சகிப்புத் தன்மை இருந்து வருகிறது. சிவசேனா என்ன கூறுகிறதோ அது மிகவும் தீவிரமாக விவாதிக்கப் பட வேண்டிய ஒன்றல்ல. எனவே அதனை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றார். இந்நிலையில், மோடி அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் நடவடிக்கையில் சிவசேனா ஈடுபட்டுள்ளதாகவே கருத இடமிருப்பதாக ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்தக் கருத்தானது, நரேந்திர மோடி அரசுக்கு உள்ள கவுரவத்தை இந்த விவாதமானது குலைத்து விடும் என்று தெரிவிப்பதாகவே உள்ளது. இந்நிலையில், அரசின் விளக்கத்தை ஆர்.எஸ்.எஸ். மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
செல்போன் சார்ஜ் செய்தபோது விபரீதம் மின்சாரம் தாக்கி மாணவன் பலி
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி மகன் இசக்கிபாண்டி (வயது14). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இரவு இசக்கிபாண்டி வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் போட்டான். அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜர் பிளக்கில் அவனது கைபட்டு மின்சாரம் தாக்கியது. தூக்கிவீசப்பட்டான். ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இசக்கிபாண்டி பரிதாபமாக இறந்தான். இதுபற்றி முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்துகிறது பா.ஜ.க.: எச்சரிக்கிறார் வைகோ
சென்னை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்தும் பாசிஸ போக்கை பாஜக கடைப்பிடிக்கிறது என மதிமுக பொதுச் செயலர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை…. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஊறு விளைவித்து மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அவற்றையெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காமல் மௌனம் கடைபிடித்து வருகிறார் என்பதால் அவருடைய ஒப்புதலின்பேரில்தான் ‘இந்துத்துவா’ சக்திகள் கொட்டம் அடித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ள கருத்துகளும் பிரதமரின் ஒப்புதலுடன்தான் வெளியிடப்பட்டிருக்கிறது என்று மக்கள் கருதுகிறார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் () இடம் பெற்றுள்ள ‘மதசார்பற்ற’ ‘சோசலிச’ () ஆகிய இரு வார்த்தைகளையும் நீக்குவது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று விஷமத்தனமான கருத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது. குடியரசு தின விழாவையொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியான விளம்பரத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரையில் இடம் பெற்றிருக்கும் ‘மதசார்பற்ற’ ‘சோசலிச’ ஆகிய இரு வார்த்தைகள் நீக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்துள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “இந்தியா மதச்சார்பற்ற தேசம் என்பதை நிரூபிக்க அரசியல் சாசனத்தின் முகவுரையில் மதச் சார்பின்மை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எதிர்காலத்தில் இந்த இரு வார்த்தைகளும் இல்லாத அரசியலமைப்புச் சட்டத்தின் பழைய முகவுரையையே மத்திய அரசு பயன்படுத்தும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மோடி அரசின் இத்தகைய போக்கு இந்துஸ்தானம் இந்துக்களுக்கே என்று கூறி வரும் ஆர்.எஸ்.எஸ். கருத்துக்கு வலு சேர்ப்பதுடன் எதிர்காலத்தில் விரும்பத்தகாத விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும். வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு என்பதுதான் இந்தியாவுக்கு உலக அரங்கில் கீர்த்தியைப் ஏற்படுத்தி புகழ் சேர்த்து வந்துள்ளது. பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழிகள், பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், பின்பற்றப்படும் மத உரிமைகள் இவைதான் இந்தியாவின் அரசியல் சாசனத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. அரசியல் சட்டத்தின் முகப்புரையில் 1976-ஆம் ஆண்டு 42-ஆவது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட ‘மதச்சார்பற்ற’ ‘சோசலிச’ ஆகிய வார்த்தைகளை நீக்குவதன் மூலம் மோடி அரசு இந்து – இந்தி – இந்து ராஷ்டிரா என்பதைச் சட்டபூர்வமாகக்க முயற்சிக்கிறது. மதச்சார்பின்மைத் தத்துவத்தின் மீது மட்டுமல்ல; இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்தவும் துணிந்துவிட்ட பா.ஜ.க. அரசின் பாசிச வெறிப்போக்கு உடனடியாக நிறுத்தப்படாவிடில் இந்திய ஒருமைப்பாடு தகர்ந்து போகும் என எச்சரிக்கிறேன்.
இணையத்தில் தொழிற் பயிற்சிக்கு அழைப்புக் கடிதம்
சென்னை: தென் மாநிலங்களில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள் தொழிற்பயிற்சி பெறுவதற்கான அழைப்புக் கடிதத்தை தற்போது இணையத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான வசதியை தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் செய்துள்ளது. இணைய ஆட்சி முறையின் முயற்சிகளில் ஒன்றாக இந்த புதிய முயற்சி செய்யப்பட்டுள்ளதாக தொழில் பயிற்சி வாரிய இயக்குநர் ஏ. ஐய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இந்த வாரியத்தின் இணைய ஆட்சி முறை முயற்சிகள் பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம், தமிழ்நாடு ஒலிபரப்பு கழகம் ஆகியவற்றின் தொழில் பயிற்சிக்கான தேர்வுகளில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த தேர்வு நான்கு கட்டமாக நடைப்பெற உள்ளது. முதல் கட்ட தேர்வு வேலூரில் வரும் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்த தேர்வுக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை இன்று முதல் இணையத்தின் வாயிலாக எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்ற மாவட்டங்களுக்கான தேர்வு அட்டவணையை இந்த வாரியத்தின் இணைய தளத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். கிராமப்புற மாணவ மாணவியர்கள் எந்தவித தடையும் இன்றி தொழில் பயிற்சி பெற்றிட தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் ஒருங்கிணைந்த நேர்காணல் நிகழ்ச்சியினை பல்வேறு இடங்கிளில் நடத்தி வருகிறது. அவ்வகையில் 31.01.2015 அன்று லதா மாதவன் பொறியியல் கல்லூரி, கிடாரிப்பட்டி, அழகர்கோவில், மதுரையில் அதனை தொடர்ந்து பிப்ரவரி 2015ல் திருவண்ணாமலை மற்றும் ஆத்தூர் பகுதிகளிலும் நேர்காணல் நிகழ்ச்சியினை நடத்த திட்டமிட்டுள்ளது.
தொழிற் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை அதிகரிப்பு
சென்னை: தொழில் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு ஊக்கத் தொகை 40% அதிகரித்துள்ளது. இதன்படி தொழில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.4,984 அளிக்கப்படும் என்று தொழில் பயிற்சி வாரிய இயக்குநர் ஏ. ஐய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இந்த வாரியத்தின் இணைய ஆட்சி முறை முயற்சிகள் பற்றி செய்தியாளர்களிடம் இதனை கூறினார். இதேபோல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பட்டையப் படிப்பு முடித்தவர்களுக்கும் ரூ.3,542 ஊக்கத் தொகையாக அளிக்கப்படும். பட்டைய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2,890, பணிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.2,758 வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கான ஆணையை மத்திய அரசு கடந்த 23ம் தேதி வெளியிட்டுள்ளது. மாதம்தோறும் அளிக்கப்படும் ஊக்கத் தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசு தொழில் பயிற்சி வாரியம் வழியாக தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கும். கடந்த நிதி ஆண்டில் தொழில் நிறுவனங்களுக்கு இந்த வாரியம் ரூ.33 கோடி அளித்துள்ளது. இந்த நிதி ஆண்டில் ரூ.50 கோடி அளிக்கும். நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் தென் மண்டல தொழில் பயிற்சி வாரியம் 5 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக இந்த வாரியத்தின் இயக்குநர் தெரிவித்தார்.
பொய்யாக பலாத்கார புகார் அளித்தால் பெண்கள் மீது நடவடிக்கை: தில்லி நீதிமன்றம்
புது தில்லி பொய்யாக பாலியல் பலாத்காரப் புகார் கொடுக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மேலும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது…. பொய்ப் புகார் காரணமாக குற்றச் செயல் புள்ளி விவரங்கள் அதிகமாகின்றன. பொய்ப் புகாருக்கு ஆளான நபர், சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கும், தொல்லைக்கும் ஆளாகிறார். அந்த நபரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். நிரபராதியான அந்த நபர், பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும், அவரது நேர்மை சந்தேகத்திற்கு உள்ளாகிறது. அந்த நபர் வாழ்நாள் முழுவதும் பலாத்காரக் குற்றவாளியாகவே கருதப்படுகிறார் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மீது பெண் கொடுத்த பொய் பலாத்கார புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்தது. இவ்வாறு பொய்ப் புகார் கொடுத்த பெண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் தனது கடமையைச் செய்யத் தவறியதாகக் கருதப்படும் எனவும் அது கூறியுள்ளது.

