புதுதில்லி: தேர்தல் பிரசாரத்தின் போது, எனது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பா.ஜ., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தில்லியில் தேர்தல் பிரசாரத்தில் ஆட்டோ ரிக்சாக்களில் கேஜ்ரிவால் நேர்மையானவர், பா.ஜ., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி சந்தர்ப்பவாதி என இருவரது படத்தை போட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கிரண் பேடி, எனது படத்தை பயன்படுத்தக்கூடாது என க் கூறி, நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், உடனடியாக தனது புகைப்படத்தை அகற்ற வேண்டும் என கூறியுள்ளதாகவும் பாஜக கூறியுள்ளது.
திரிபோலி விடுதி தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு
திரிபோலி லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கோரிந்தியா சர்வதேச சுற்றுலா விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் 3 காவலர்களை சுட்டுக் கொன்றனர். மேலும், அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிணையக் கைதிகளாகவும் பிடித்து வைத்துள்ளனர். குண்டு துளைக்காத கவசம் அணிந்து முகத்தை மூடியபடி 5 பேர் விடுதியில் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டதாக விடுதி மேலாளர் அசன் அல்-அபே தெரிவித்தார். கடற்கரை ஓரமாக உள்ள இந்த விடுதியில் நுழைந்த அவர்கள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர். இந்த சத்தம் கேட்டது விடுதியில் தங்கியிருந்த பயணிகள் அனைவரையும் வெளியேறும் படி மேலாளர் கூறியுள்ளார். உடனடியாக வெளியேறிய பயணிகளுடன் அபேவும் வெளியே வந்துள்ளார். ஓட்டலில் தங்கியிருக்கும் பெரும்பாலானவர்கள் ஐரோப்பா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மர்ம நபர்களிடம் பலர் பிணைக் கைதிகளாக சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட 50 பேர் வேட்பு மனு தாக்கல்
திருச்சி/ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 50 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. தி.மு.க., சார்பில் ஆனந்தும், அ.தி.மு.க., சார்பில் வளர்மதியும் போட்டியிடுகின்றனர். மேலும் இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். பா.ஜ.க, சார்பில் போட்டியிட அதன் மாநில துணைத் தலைவர், வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர் மீது வழக்கு இருப்பதாக, புகார் கிளம்பிய நிலையில், அவருக்கு மாற்று வேட்பாளராக, மாநகர் மாவட்ட தலைவர் பார்த்திபன் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாஜக ஆட்சியில் மக்களுக்கு நிம்மதியில்லை: குஷ்பு பேச்சு
பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை என்று சென்னையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசினார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும், அந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி பிரிவு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய குஷ்பு, பெண்கள் தங்களது குடும்பச் செலவுக்காக இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்து வந்தனர். இந்தத் திட்டத்துக்கும் மோடி அரசு வேட்டு வைக்கப் பார்க்கிறது. இதனை ரத்து செய்து ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கப் பார்க்கிறது. பாஜக ஆட்சியில் மக்கள் யாருக்கும் நிம்மதி இல்லை. தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இதே நிலைதான். ஜாதி, மத கலவரம் எங்கு எப்போது நடக்கும் என்ற பயமும் பீதியும் நிலவுகிறது. இந்த 7 மாதத்தில் அவர்கள் என்ன சாதித்தார்கள்? காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களைத்தான் செயல்படுத்துகிறது மோடி அரசு. 10 ஆண்டுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது கையெழுத்து மட்டும்தான் இப்போது மோடி போட்டிருக்கிறார் என்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் குமரி அனந்தன், கோபண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேஸ்புக்கை ஹேக் செய்தது லிஸார்ட் ஸ்குவாட் பயங்கரவாதிகளாம்!
செவ்வாய்க்கிழமையான இன்று உலக அளவில் மக்களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டு வரும் பேஸ்புக்கை சில மணித்துளிகள் பயன்படுத்த இயலாமல் போனது. தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிப் போனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் சேவைகள். பேஸ்புக் பயனாளர்கள், தங்களது கணக்கைத் திறந்து வழக்கம் போல் செயல்பட எவ்வளவோ முயன்றனர். ஆனால் அவர்களால் பேஸ்புக் கணக்கைத் திறக்க முடியவில்லை. பேஸ்புக் கணக்கு செயல்படவில்லை. இந்நிலையில் இந்தப் பிரச்னையை தீர்க்க தீவிரமாக பணியாற்றுவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியது. “மன்னிக்கவும், ஏதோ தவறு நடந்துவிட்டது. இதனை சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாங்கள் எங்களால் முடிந்தவரையில் விரைவில் சரிசெய்து விடுவோம்,” என்று பேஸ்புக் நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்து இருந்தது. சிறிது நேரம் கழித்து இந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டது என்றாலும், பேஸ்புக்கை இணையத்தில் இயங்கிவரும் பயங்கரவாதிகள் ஹேக் செய்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் “பேஸ்புக்கை யார் ஹேக் செய்தது என்று நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டாம், அது நாங்கள்தான்” என்று லிசார்ட் ஸ்குவாட் என்ற ஹேக்கிங் குழு டுவிட்டரில் வரிசையாக பதில் கொடுத்தது. இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள இந்த ‘பல்லி படை’ ஏற்கெனவே அமெரிக்காவின் ‘சோனி பிக்சர்ஸ்’ தாக்குதலுக்கும் காரணமாகக் கூறப்பட்டது, இதே ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பல்லி படைதான் நேற்று மலேசிய ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தையும் ஹேக் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.லட்சுமண் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்: மகாராஷ்டிர அரசு
மும்பை மறைந்த புகழ்பெற்ற கார்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.. பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்கள் மூலம் கருத்துக்களை வெளியிடுவதில் சிறந்தவர். திருவாளர் பொது ஜனம் என்ற பெயரில் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்கள் வெளியிட்டு பணியாற்றியுள்ளார். புனேயில் வசித்து வந்த அவருக்கு 2003–ம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டது. இடது கை செயல் இழந்தது. வலது கையால் கார்ட்டூன்களை தொடர்ந்து வரைந்து வந்தார். 60 ஆண்டுகளாக பத்திரிகைகளில் பணியாற்றி வந்தார். 94 வயதான ஆர்.கே லட்சுமண் சிறுநீரக கோளாறு காரணமாக புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. [su_heading size=”30″ margin=”30″]ஆர்.கே.லட்சுமண் வாழ்க்கைக் குறிப்பு: [/su_heading] ஆர்.கே.லட்சுமண் 1921–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24–ந் தேதி மைசூரில் பிறந்தார். இவரது பெற்றோர் தமிழ் நாட்டின் ராசிபுரத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை கிருஷ்ணசாமி அய்யர் சென்னையில் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் அவர் மைசூர் மகாராஜா மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டதால் குடும்பத்துடன் மைசூரில் குடியேறினார். அங்கு ஆர்.கே.லட்சுமண் பிறந்தார். பத்திரிகைகளில் பணியாற்றும் போது தனது பெயருடன் பூர்வீக ஊரை குறிப்பிடும் வகையில் ராசிபுரம் கிருஷ்ணசாமி அய்யர் லட்சுமண் என குறிப்பிடும் வகையில் ஆர்.கே.நாராயண் என வைத்துக் கொண்டார். ஆர்.கே.லட்சுமண் பிரபல நடன கலைஞரும் நடிகையுமான குமாரி கமலாவை திருமணம் செய்தார். 1960–ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பழம் பெரும் நடிகையான குமாரி கமலா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் 100–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அந்தக்கால சினிமாவில் இவரது நடனம் மிகவும் பிரபலம். வாலிபர் சங்கம், ராமநாம மகிமை படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், தொடர்ந்து ஜகதல பிரதாபன், ஸ்ரீவள்ளி, மீரா, நாம் இருவர், என் மகன், சிவகங்கை சீமை, பாவை விளக்கு, பார்த்திபன் கனவு, கொஞ்சும் சலங்கை ஆகிய படங்கள் நடத்துள்ளார். குமாரி கமலாவை விவாகரத்து செய்த பின்பு ஆர்.கே.லட்சுமண் மறுமணம் செய்தார். 2–வது மனைவி பெயரும் கமலா என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீனிவாஸ் என்ற மகன் இருக்கிறார். ஆர்.கே.லட்சுமண் மத்திய அரசின் பத்மபூஷன், பத்மவிபூஷண் விருதுகளும், பத்திரிகை துறையில் 60 ஆண்டு பணிக்காக மகாசேசே விருதும் பெற்றுள்ளார்.
மீண்டது பேஸ்புக் சேவை
பேஸ்புக் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு அதன் சேவை மீண்டது. சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவை, சில நிமிடங்கள் செயலிழந்ததும் அதனைப் பயன்படுத்தும் பலரும் உடனே தகவல் பரிமாறிக் கொண்டனர். மற்றொரு சமூக வலைத்தளமான டிவிட்டரில் பேஸ்புக் செயல்படவில்லை என புகார்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் இன்னொரு புகைப்பட சேவையான இன்ஸ்டாக்ராமும் செயலிழந்தது. இதன் தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த சேவை சில நிமிட இடைவெளியில் மீண்டும் தொடங்கியது.

