
புரோட்ட பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள கோவில்விளையை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 54). இவருக்கு இரண்டு மகன்கள்.
சதீஷ் (24), லிங்கராஜா (22). இவர்கள் அனைவரும் தேங்காய் உறிக்கும் தொழில் செய்து வருகின்றனா்.
நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக சந்திரசேகர் வீட்டில் உள்ள அனைவருக்கும் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள கடையில் இருந்து புரோட்டா வாங்கி வந்தார்.
அப்போது, புரோட்டாவை பங்கு வைத்து சாப்பிடுவதில் சதீசுக்கும், லிங்கராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய் தகராறு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவா் மாறி, மாறி அடிக்க துவங்கினா்.
இதில் சதீஷ் அணிந்திருந்த தங்கச்சங்கிலி அறுந்து விழுந்தது.
இதனால் மனமுடைந்த சதீஷ் கோபித்து கொண்டு வீட்டில் உள்ள ஒரு வேறு ஒரு அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டு பூட்டி கொண்டார்.
நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்
அப்போது, அங்கு சதீஷ் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பதறியபடி
அவரை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சதீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புரோட்டா பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சதீஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



