மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அதிமுக பிரமுகர் புகழேந்தி, ஜனார்த்தனன் ஆகியோர் தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வருமான வரித்துறை தரப்பு, தங்களுக்கு ஜெயலலிதா ரூ.40 கோடி வரி பாக்கி வைத்திருக்கிறார்.
எனவே அவரது போயஸ் தோட்ட இல்லம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. நில அளவையர் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே அளவிடும் பணியை அண்ணா பல்கலைக்கழகம் அல்லது வேறு அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம் என்று கூறப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாகியாக நியமிக்க வேண்டும் என்றார். அதற்கு, ஜெயலலிதா மறைவிற்கு பின் போயஸ் தோட்ட இல்லம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து பேசிய அரசு வழக்கறிஞர், ஜெயலலிதா இல்லம் நினைவில்லமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதால், தற்போது மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாடில் இருக்கிறது என்றார்.
இதையடுத்து பேசிய தீபா, தீபக் தரப்பு வழக்கறிஞர்கள், தங்களுக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படும் அங்கு வேறு சிலரும் தங்கியிருக்கின்றனர்.
கடந்த 1996ஆம் ஆண்டு வங்கி ஒன்றில் ஜெயலலிதா பெற்ற ரூ.2 கோடி கடன், தற்போது வட்டியுடன் ரூ.20 கோடியாக உயர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டனர். இதைக் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் சொத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தது உண்மை தானா என்று தெரிய வேண்டும்.
எனவே வரும் 30ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு தீபா மற்றும் தீபக் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.