சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான 2ஆவது இடத்திற்கான விருதை மத்திய அரசு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வழங்கியுள்ளது.
ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு (Best maintained iconic place) கடந்த வாரத்தில் ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கியது.
அதில், தூய்மை பராமரிப்புகளுக்கான இரண்டாவது இடமாக மீனாட்சியம்மன் கோயில் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் கடந்த சனிக்கிழமை பெற்றுக்கொண்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 இ-கழிவறைகள், குப்பைகளை பிரித்து சேகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள், நெகிழி பைகளுக்கு தடை விதிப்பு, சுழற்சி முறையில் சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு- காஷ்மீரில் உள்ள வைஷ்னோ தேவி கோயில் சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான முதலிடத்தைப் பிடித்துள்ளது.