
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் செப்.1 முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் பொதுமக்களிடம் கெடுபிடி காட்ட வேண்டாம் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்ட மசோதாவை நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றியது மத்திய அரசு. இதற்கு பலத்த எதிர்ப்பு உள்ள நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை காட்டிலும் பன்மடங்கு அபராதத் தொகையை அதிகரித்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தது முதல், நாடு முழுவதும் போக்குவரத்துக் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் தொடர்ந்து போக்குவரத்துக் காவலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்படுவதை அம்மாநில ஊடகங்கள் பெரியளவில் செய்தி வெளியிட்டன.
எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோர் அபராதத் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பினராய் விஜயனை வலியுறுத்தினர். இதையடுத்து அவர் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி அதில் சில முடிவுகளை எடுத்துள்ளாராம்.
பொதுமக்களிடம் போக்குவரத்துக் காவலர்கள் கெடுபிடி காட்டாமல் சந்தேகத்திற்குரிய நபர்களை மட்டும் பிடித்து விசாரிக்குமாறு பினராயி அறிவுறுத்தியுள்ளார். உயர்த்தப்பட்ட அபராதத் தொகையால் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதை அறிந்த பினராயி, புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை கேரளாவில் நிறுத்தி வைக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.