
இன்று மத்திய அரசால் ஹிந்தி திவஸ் எனும் ஹிந்தி நாள் கொண்டாடப் படுகிறது. செப். 14ம் தேதி இன்று கொண்டாடப் படும் ஹிந்தி நாளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ஆசை ஒன்றினை டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கிறார். அது ஹிந்தி பேசாத மாநில மக்களிடம் எதிர்ப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால், உலக அளவில் இந்தியாவை பிரபலப்படுத்த முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள அவரது டிவிட்டர் கருத்துதான் இப்போது விவாதப் பொருள் ஆகியுள்ளது.
ஹிந்தி திவஸ் – ஹிந்தி நாளினை முன்னிட்டு அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பது…
இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மகத்துவம் உண்டு. ஆயினும், ஒட்டுமொத்த நமது நாட்டுக்கும் ஒரு மொழி இருப்பது அவசியம். நாட்டின் ஒரே தொடர்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும். அது இந்தியாவை உலகில் அடையாளப் படுத்தும் ஒரு மொழியாக இருக்க வேண்டும். இன்று இந்தியாவை ஒற்றுமை என்பதில் பிணைத்து வைக்கும் செயலைச் செய்யும் மொழியாக ஒன்று இருக்கிறதென்றால், அது நாட்டில் பெரும்பான்மையானோரால் பேசப்படும் ஹிந்தி மொழிதான்!
- என்று கூறியுள்ளார் அமித் ஷா. மேலும், ஹிந்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அத்துடன், ஹிந்தி மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அமித் ஷா.
ஆனால், அவரது ஹிந்தி மொழி கற்றுக் கொள்ளும் வேண்டுகோளுக்கு தமிழகத்தின் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து குறிப்பிட்ட போது, இந்தியாவா? ‘ஹிந்தி’-யாவா? உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கருத்தை மறுபரிசீலனை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க திமுக தயாராக இருக்கிறது. இது இந்தியா . ‘ஹிந்தி’யா அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இது போல் ஹிந்தி பேசாத மாநிலங்களில் இருந்தும் அமித் ஷாவின் ஆசைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரவர் தங்கள் மாநில மொழியையே முதன்மைப் படுத்த வேண்டும் என்ற கருத்தினை வெளிப்படுத்துவதுடன், இந்திக்கு எதிராகவும் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகின்றனர். அதற்காக டிவிட்டர் பதிவில் #StopHindiImposition என்பதை பிரபலப் படுத்தி வருகின்றனர்.