
அக்டோபர் 8 ஆம் தேதிக்குள் 6 இந்திய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் இந்துக் கோவில்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு அனுப்பிய அச்சுறுத்தல் கடிதம் ரோடக் காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கடிதத்தில் பல பிரபலமான ரயில் நிலையங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. போபால், மும்பை, ஜெய்ப்பூர், கோட்டா, சென்னை, ஹிசார் மற்றும் ரோஹ்தக் என ரயில் நிலையங்களைக் குறி வைத்திருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு ஜெய்ஷ்-இ-முகமது அனுப்பியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் அக்டோபர் 8 ஆம் தேதிக்குள் ஆறு மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களையும் கோயில்களையும் வெடி வைத்து தகர்க்கப் போவதாக அச்சுறுத்தி, ரோடக் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து முக்கியமான ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் ரோடக் சந்திப்பு ரயில் நிலைய கண்காணிப்பாளரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிலைய மேலாளரால் சாதாரண தபால் மூலம் பெறப்பட்டதாகவும் ஹரியானா ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் மசூத் அகமது என்ற நபர் கடிதத்தில் அனுப்புநராகக் குறிப்பிடப்படுகிறார். பயங்கரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ரேவரி ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மற்ற முக்கிய இடங்கள் மற்றும் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது,
இந்தியாவுடன் மரபு சார்ந்த போர் நடந்தால் பாகிஸ்தான் தோற்றுவிடும்… என்று இம்ரான் பேசியிருப்பதால், இந்தியாவுடனான மறைமுக பயங்கரவாதத் தாக்குதலையே பாகிஸ்தான் மேற்கொள்ளும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. அதற்கு ஏற்ப, பாகிஸ்தான் அச்சுறுத்தல் வெளியிட்டு வரும் இந்த நேரத்தில், அதிகாரிகள் இந்த குண்டு வைப்பு அச்சுறுத்தலை எளிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. கிழிந்த நோட்புக் தாளில் எழுதப்பட்டதாகத் தோன்றும் கடிதத்தின் நம்பகத்தன்மையை காவல்துறை இன்னும் உறுதி செய்ய வில்லை.
370 வது பிரிவை ரத்து செய்த பின்னர், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தனது பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக அவர்களின் நம்பகமான வட்டாரங்கள் தங்களுக்கு அறிவித்ததாக உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.
கடற்படைத் தலைவர் கடந்த மாதம் நீருக்கடியில் தாக்குதல் நடத்துவதாக எச்சரித்திருந்தபோது, குஜராத்தின் ரான் ஆப் கட்சில் உள்ள சர் க்ரீக்கில் கேட்பாரற்ற நிலையில் படகுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தெற்கு பட்குதி ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே.செய்னி பயங்கரவாதத் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை அறிவித்தார்.
குஜராத்தில் உள்ள இந்திய விமானப்படையின் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று சில உளவு அறிக்கைகள் குறிப்பதாக தலைமை ஏர் மார்ஷல் பி.எஸ்.தனோவா தெரிவித்தார்.



