
சென்னையில் கோயில் பிரசாதம் எனக் கூறி தந்த விஷப்பொடியைச் சாப்பிட்ட பேராசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவிக்கு தீவிர சிகிச்சை.!
சென்னையை அடுத்துள்ள காசிமேடு சூரிய நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (35). இவரது மனைவி சரண்யா (30). பேராசிரியான கார்த்தி, வேலை செய்து வந்த தனியார் கல்லூரியில் எடுக்கப்பட்ட ஆள் குறைப்பு நடவடிக்கையின் காரணமாக சமீபத்தில் வேலையை இழந்துள்ளார்.
இதனையடுத்து கார்த்தி, எம்.கே.பி. நகர், முல்லை நகரைச் சேர்ந்த வேலாயுதம் (42) என்பவரிடம், அரசுக் கல்லூரியில் வேலைக்கு சேர்வதற்கு ரூ.3 லட்சம் கொடுத்தாக கூறப்படுகிறது. .
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் வேலாயுதம் அவருக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கார்த்தி, தான் வேலைக்காக கொடுத்த பணத்தை திருப்பி தந்து விடுமாறு கேட்டு வேலாயுதத்தின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். .
கார்த்தியின் இந்த நடவடிக்கை வேலாயுதத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கார்த்தியும், அவரது மனைவி சரண்யாவும் பணம் கேட்டு வேலாயுதம் வீட்டுக்கு கடந்த திங்கள்கிழமை அன்று சென்றுள்ளனா்.
அங்கு வீட்டில் இருந்த வேலாயுதம் தான் சாய்பாபா கோயிலுக்குச் சென்று வந்ததாகக் கூறி, ஒரு பொடியை பிரசாதமாக இருவரிடமும் கொடுத்து அதை சாப்பிடும்படி கூறி உள்ளார்.
அந்தப் பொடியை சாப்பிட்ட கார்த்தி சிறிது நேரத்தில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதை பார்த்து பதறிய கார்திக் மனைவி சரண்யா, அப்பகுதி மக்கள் உதவியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கார்த்தியை கொண்டு சேர்த்தார்.
மருத்துவமனையில் கார்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு சரண்யா அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்துள்ளார்.
அதேவேளையில் சரண்யாவும், அந்த பொடியை சிறிது சாப்பிட்டதால், அவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து எம்.கே.பி.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், வேலாயுதம் பிரசாதம் என கொடுத்த பொடியில் விஷம் கலந்துள்ளது.
இதனை கார்த்திக் சாப்பிட்டதால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸார், வேலாயுதம், அவரது மனைவி ஆகியோரை தேடி வருகின்றனர்.



