
கேரளாவில், ‘சர்ச்’ சுக்கு உரிமை கோருவதில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, 12 பாதிரியார்களை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில், பிராவோம் என்ற இடத்தில், துாய மேரி தேவாலயம் என்ற, மிக பழமையான சர்ச் உள்ளது.
இந்த சர்ச்சுக்கு, கிறிஸ்தவர்களில் உள்ள, ஜாகோபிட்ஸ், மலங்கரா என்ற இரண்டு பிரிவினர், பல ஆண்டுகளாக உரிமை கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், இரு தரப்பினருக்கும் இடையே, அடிக்கடி தகரறு, கைகலப்பு, அடிதடி, மோதல் நடந்து வழக்கமாகி விட்டது.
இந்நிலையில், ஜாகோபிட்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள், கடந்த சில நாட்களாக, சர்ச்சுக்குள் இருந்த படி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனையடுத்து மற்றொரு பிரிவான மலங்கரா பிரிவைச் சேர்ந்தவர்கள், சர்ச்சுக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர்.
ஆனால், சர்ச்சின் பிரதான வாயிலை அடைத்து, உள்ளே இருந்தபடி, ஜாகோபிட்ஸ் பிரிவினர் போராட்டங்களுக்கடையே பிரார்த்தனைகளையும் தொடா்ந்து நடத்தி வந்துள்ளனா்.
இதனால், பெரும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த, கேரள உயர் நீதிமன்றம்,
‘சர்ச்சுக்குள் இருப்பவர்களை வெளியேற்றி, சர்ச்சை, அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’ என, சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஏராளமான போலீசார், சர்ச்சுக்கு வந்தனர்.
அவர்களை உள்ளே நுழையவிடாமல், கேட்டை அடைத்து, ஜாகோபிட்ஸ் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேட்டுக்கு வெளியில் திரண்டிருந்த மற்றொரு பிரிவினரும், உள்ளே நுழைய முயன்றனர்.
இதனால், அங்கு பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கடும் முயற்சிக்கு பின், போலீசார், சர்ச்சை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்;
12 பாதிரியார்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் தற்போது, பிராவோம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.



