
தமிழகத்தில் விரைவில் இந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டம் வெடிக்கும் என்றும்,
இந்தியை கற்றுத் தாருங்கள் என்று மக்கள் கேட்கும் காலம் விரைவில் வரும் என்றும் இல.கணேசன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் இன்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
“பாரத பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு செயல் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றி வருகிறார்.
தூய்மை பாரதம் திட்டம் மூலம் ஊராட்சிகளில் கூட கழிவறை கட்டப்பட்டு விட்டது.
தேச பிதா காந்தியின் கொள்கைகளுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என்று, காங்கிரசார் கூறியுள்ளனர்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை பாரதீய ஜனதா கொண்டாடி வருகிறது.
காந்தியின் கொள்கைகளுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கோவருக்கும், காந்திக்கும் தொடர்பு உண்டு.
பாரதீய ஜனதாவிலும், காந்தீய சிந்தனைகள் கொண்ட தலைவர்கள் உள்ளனர்.
ஏழை மாணவர்களை கல்வியில் உயர்ந்தவர்களாக்க தொடங்கப்பட்டது, நவோதயா பள்ளிகள். தமிழகத்தில் இப்பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் இந்தியை திணிக்க முயல்வதாக கூறுகிறார்கள். பாரதீய ஜனதா ஒரு போதும் இந்தியை திணிக்க முயலவில்லை.
இந்திக்கு ஆதரவாக தமிழகத்தில் மக்கள் போராட்டம் விரைவில் வெடிக்கும்.
இந்தியை கற்றுத் தாருங்கள் என்று மக்கள் கேட்கும் காலம் விரைவில் வரும்” இவாறு அவர் தெரிவித்தார்.



