
‘தங்கம் பொது மன்னிப்பு’ என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை முதலீடு செய்ய வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவில் உள்ள கறுப்பை பணத்தை ஒழிப்பதாக கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த முயற்சி வெற்றியா ? தோல்வியா ? என்ற விவாதங்கள் நடைபெற்றன.

அதேசமயம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அனைத்து பணமும் வங்கிக் கணக்கிற்குள் வரவில்லை. அப்போது கறுப்புப்பணம் தேங்கியதாக கூறப்பட்டது. இந்தப் பணம் பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டு கறுப்புப் பணமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே இந்தக் கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ‘தங்கம் பொது மன்னிப்பு’ என்ற திட்டத்தை விரைவில் மத்திய அரசு நடைமுறை படுத்தவுள்ளதாக பேசப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி, கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள், அதனை தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

ஆனால் தங்கத்தின் மதிப்பிற்கான முழுத்தொகைக்கும் வரி செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி ரசீது இல்லாமல் கறுப்புப் பணத்தில் வாங்கிய பதுக்கல் தங்கத்திற்கும் முறையான வரியை செலுத்தி, அதனை முறையாக வரி செலுத்திய தங்கமாக மாற்றிக்கொள்ளலாம் எனப்படுகிறது.
தங்கம் வைத்திருப்பதற்கு ஒர் வரம்பு திட்டத்தை கொண்டு வரவும், கணக்கிடப்படாத தங்கத்தை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி வைத்திருப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
திருமணமான பெண்களின் தங்க நகைகள் ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் கீழே வைத்திருந்தால் அதற்கு இந்த திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதன் மூலம் வரும் வரிப்பணத்தை ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண்’ திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தகவல்களின் படி, இதுவரை இந்தியர்கள் வரி செலுத்தி சரியான முறையில் சுமார் 20,000 டன் தங்கத்தை வைத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் வரி செலுத்தாமல் வாங்கி பதுக்கி வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பையும் சேர்த்தால் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை டன் தங்கம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ஒன்று முதல் 1.5 ட்ரில்லியன் டாலர் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலீட்டு ஆலோசகர்கள் கூறும்போது, இது நல்ல விஷயம்தான். ஆனால் இதை நடைமுறைப்படுத்தும் போது சில சிக்கல் ஏற்படும் எனத் தெரிவித்தனர். ஏனென்றால் இந்தியாவில் வாழும் மக்கள் பாரம்பரியமாக தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் கொண்டவர்கள்.
அவர்களிடம் பரம்பரையாக வைத்திருக்கும் தங்கம் இருக்கும். அந்தத் தங்கத்திற்கு திடீரென ரசீதுகளை கேட்டு கணக்கில் காட்டச்சொன்னால் அது முடியாத செயலாகிவிடும்.
இதேபோன்று இந்தியாவில் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் சிறுவயது முதலே தங்கத்தில் முதலீடு செய்து சேர்க்கின்றனர். அவ்வாறு வாங்கிய தங்கத்திற்கு அவர்கள் ரசீதுகளை சேகரித்து, பாதுகாத்து வைத்திருப்பார்களா ? என்பது கேள்விக்குறிதான்.

எனவே இவர்களும் மீண்டும் வரி செலுத்தும் நிலை வரலாம் என்று கூறுகின்றனர். இந்தத் திட்டத்தின் முழு அறிவிப்பு வெளியான பின்னரே, முழுமையான பிரச்னைகள் மற்றும் பலன்கள் குறித்து கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
வருமான வரிக்கான பொது மன்னிப்பு திட்டத்தைப் போலவே, தங்க மன்னிப்புத் திட்டமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திறந்திருக்கும், முறையான பில்கள் இல்லாமல் தங்கத்தை வெளியிடத் தவறியவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய தங்க திட்டத்தின் படி, மக்கள் தங்கள் கையில் இருக்கும் தங்கத்தை முழுமையாக கணக்கில் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வரவில்லை என்றால், அரசு முன் வந்து கண்டு பிடித்தால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த தங்க மன்னிப்பு திட்டத்திற்கான பொருளாதார விவகார திணைக்களம் மற்றும் வருவாய் திணைக்களம் கூட்டாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் படி, கூட்டுக்குடும்பம் சுமார் நான்கு கிலோ வரையிலும், அறக்கட்டளைகள் 20 கிலோ வரையிலும் தங்கம் வைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகம் ஏற்கனவே தனது முன்மொழிவை அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளதாகவும், அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இந்த முன்மொழிவு குறித்து அமைச்சரவை விவாதிக்க திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக முடிவு தாமதமானது என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.