
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியாகும்’ என்று, நாங்குநேரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.நாராயணன் வெற்றிபெற்றார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்றுஇரவு நடைபெற்றது.
கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:மக்களவைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பை தவறவிட்டோம். ஆனால், இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டோம்.

அதற்கு மக்கள் ஆதரவு அளித்தனர். நாங்குநேரி தொகுதியில் பெற்ற வெற்றி அதிமுக என்ற இயக்கத்தை அசைக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறது. இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரவுள்ளது.
டிசம்பரில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும். நாங்குநேரி தொகுதி சொர்க்க பூமியாக மாறும் என்றார் அவர்.
மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்தார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் வி.எம்.ராஜலெட்சுமி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, வி.சரோஜா, ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி என்.நடராஜன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜி.பாஸ்கரன், எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.