October 12, 2024, 8:08 AM
27.1 C
Chennai

குளித்தலையை கொஞ்சம் கண்டுக்குங்க… கெஞ்சும் மக்கள்! உள்ளாட்சித் தேர்தலில் ‘ஷாக்’ கொடுக்க திட்டம்!

செந்தில் பாலாஜி ஓர் அரசியல் வியாபாரி என்று கொந்தளிக்கின்றனர் குளித்தலை மக்கள். அதாவது கருணாநிதியின் முதல் தொகுதியான குளித்தலையைச் சேர்ந்த தி.மு.க வினர்.

அண்மையில் ஒரு வீடியோ சமூகத் தளங்களில் பரபரப்பானது. இந்த ஒருத்தராவது உண்மையைச் சொல்லுறாரே… என்று அங்கலாய்த்தபடி பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கொண்டனர். அதில், செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி., ஆகியோரை முன்னால் வைத்துக் கொண்டே, நாங்கள் எல்லாம் என்ன கொடிகட்டவும் கோஷம் போடவும்தானா என்று வறுத்து எடுக்கிறார் அந்த திமுக.,காரர்.

இந்த வீடியோவில், செந்தில் பாலாஜியையும், ஜோதிமணியையும் வைத்தே கலாய்க்கிறார். இந்த வீடியோவில் உள்ளபடிதான், இப்போது திமுக.,வினரின் மனப்போக்கு இங்கே உள்ளது என்கிறார்கள்.

அந்த வீடியோ பதிவு…

இன்னும் கரூர் மக்கள் கூறும் குற்றச்சாட்டுகள் இவை… அவர் வாங்கிப் போட்ட இடத்துக்காகத்தான் கரூர் பேருந்து நிலையமே! தவிர 50 ஆண்டுகால போராட்டத்தில் உள்ள குளித்தலை பேருந்து நிலையம் எப்போது என்று சொன்னாரா ?

ALSO READ:  இந்தியா Vs ஜிம்பாப்வே டி-20 தொடர் (2024): சாதித்த இளம் பட்டாளம்!

குளித்தலையில் தான் மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி 1957ஆம் ஆண்டு போட்டியிட்டு முதன்முதலில் ஜெயித்து சட்டசபை சென்றார் என்ற நன்றி கூட செந்தில் பாலாஜிக்கு இல்லை… குளித்தலையைப் புறக்கணிக்கிறார்கள் என்கின்றனர்.

குளித்தலை தொகுதிக்கு தி.மு.க எம்.எல்.ஏ இருந்தும் பயனில்லை! நகராட்சிக்கு என்று சொந்தமான பேருந்து நிலையம் இல்லை, இடியும் நிலையில் பெரியார் பாலம், எரியாத சிக்னல்கள், வழிகாட்டிகள் இல்லாத அவலநிலையுடன், தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சர்வீஸ் ரோடு இதுவரை போடப்படவில்லை என கோரிக்கை நீண்டு கொண்டே செல்கின்றது

தமிழகத்தில் முதன்முறையாக தி.மு.க தலைவர் கருணாநிதி 1957 ஆம் ஆண்டு குளித்தலை சட்டமன்ற தொகுதியில்தான் போட்டியிட்டு வென்றார். தற்போது ஆளுகின்ற அ.தி.மு.க ஆட்சி இருந்தாலும், இன்றும் தி.மு.க வினை சார்ந்த ராமர் தான் எம்.எல்.ஏ வாக இருக்கின்றார்.

இந்த குளித்தலை சட்டமன்ற தொகுதியும், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டதுதான். இதில், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தி.மு.க கூட்டணியினை சார்ந்த பாரிவேந்தர் தான் தற்போதைய எம்.பி.,!

ALSO READ:  தோல்வியை வெற்றியாக மாற்றிய இந்திய அணி!

இருந்தாலும், குளித்தலை தொகுதிக்கு எந்தவித முன்னேற்றமும் எம்.எல்.ஏ நிதியிலும், எம்.பி நிதியிலும் ஒதுக்கி செய்து கொடுக்கவில்லை. தற்போதைய தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடவில்லை! ஆனால் கரூர் தொகுதிக்கு சில தினங்களுக்கு முன்னர் பேருந்து நிலையம் வேண்டுமென்று ஒரு விளம்பரத்திற்காக உண்ணாவிரதம் இருந்தார்.

இந்நிலையில் இளைஞர்களே, தங்களது ஊரான குளித்தலையின் தலையாய பிரச்னைகளைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இன்றியமையாத தேவைகளான பேருந்து நிலையம், புறவழிச் சாலைகளிலிருந்து பிரியும் சர்வீஸ் ரோடு எனப்படும் அணுகு சாலை, உழவர் சந்தை வழியாக செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது, சிக்னல்கள் எரிவதில்லை, மேலும், குளித்தலைக்கு மணப்பாறையிலிருந்தும், திருச்சியிலிருந்தும், கரூரிலிருந்தும், முசிறியிலிருந்தும் என்று நான்கு புறங்களில் வரும் வாகனங்களுக்கு எந்த ஊர் குளித்தலை, எந்த ஊருக்கு இந்த சாலை செல்கின்றது என்ற பெயர்பலகைகள் கூட வைக்கவில்லை.

இந்தியாவின் மிகப்பெரிய பாலங்களில் ஒன்று, குளித்தலையிலிருந்து முசிறிக்கு கடக்கும் காவிரி ஆற்றின் மேலே உள்ள உயர்மட்ட பாலம். 1971 ஆம் ஆண்டு அதே கருணாநிதி முதல்வரான நிலையில், அதே கருணாநிதி ஆட்சியிலேயே பாலமும் திறக்கப்பட்டது. ஆனால், இன்று ஆற்றில் மணல் எடுத்ததை அடுத்து அரிப்பு நிலையில் பாலம் எப்போது வேண்டுமென்றாலும் விழும் நிலையில் உள்ளது.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக... சபரிமலை நடை திறப்பு!

பாலத்தில் உள்ள சாலையின் மேற்பரப்பில் சேதமடைந்தும், அடிப்பகுதி சேதமடைந்தும் உள்ளது. இந்நிலையில், ஊருக்குள் பேருந்துகள் இரவு நேரத்திலும் வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன.

குளித்தலை தொகுதியை மாநில அரசு தனி கவனம் செலுத்துவதோடு, தற்போதைய தி.மு.க வின் தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி என்றபடி தந்தைக்காகவும், தந்தையின் முதல் தொகுதிக்காகவும் ஏதாவது செய்வாரா ? என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம்.

இத்தகைய நிலையில் குளித்தலை பிரச்னைகளைக் கையிலெடுத்துக் கொண்டு, எந்த அரசியல் கட்சிகளையும் நம்பாமல், இளைஞர்களே இந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி பாகுபாடின்றி போட்டியிட தயாராகி வருகின்றனர்.

author avatar
ஆனந்தகுமார்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week