
பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழக எம்பிக்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹருல்லா கடிதம்.
மேலும் கடிதத்தில் கூறியிருப்பதாவது. பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு மக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்திலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிம் அல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகுக்கின்றது.
இது மத ரீதியான பாரபட்சம் ஆகும். சிறுபான்மை மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களை தவிர்த்து மற்ற சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று விஷமத்தனமான நோக்கத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இந்த மசோதாவை மத்திய பா.ஜனதா அரசு நிறைவேற்ற முனைந்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, மக்களிடையே பாரபட்சத்தைப் பாராட்டுகின்ற, இலங்கைத் தமிழர் நலனுக்கு விரோதமான இச்சட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து பாராளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



