
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மாடுபிடி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.
அதில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ் பெற்றது.
மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டிலும் அதன் மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

அலங்காநல்லூரில் நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் இப்போதே தயார் செய்து வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும், மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்பர்.
விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்குகளையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.
இதன்படி அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்த காளைகளுக்கும், அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பிரம்மாண்ட பரிசுகள் வழங்கப்படும்.
இதனால் இந்த மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளை உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் அதிக ஆர்வம் காட்டுவர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை ஆயத்தப்படுத்தும் பயிற்சிகள் கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை தமிழகத்திலுள்ள ஜல்லிக்கட்டு காளைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.

இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்தயேக செல்லிடப்பேசி செயலியில் காளைகளின் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் காளைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு காளைகளின உரிமையாளர்கள் பெயர் ஊர் விவரம், காளை எந்த இனத்தைச் சேர்ந்தது. அதன் வயது எந்தெந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படும் போன்ற விவரங்களை கால்நடை மருத்துவர்கள் சேகரித்து அந்த செல்லிடப்பேசி செயலி பதிவேற்றம் செய்து வருகின்றனர்.



