
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரை நிறைவடைந்து, வாக்குப்பதிவுக்கான நேரம் நெருங்கி வருகிறது.
எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சி அமைகிறதோ அப்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்பு பலமாகக் கட்டமைக்கப்படும்.
ஊராட்சிகள் தோறும் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும்.
எப்போதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சி அமைகிறதோ அப்பொதெல்லாம் உள்ளாட்சி என்கிற கட்டமைப்பு சிதறடிக்கப்படுவது வழக்கம்.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பதை, 2016-ம் ஆண்டு நடைபெறவேண்டிய உள்ளாட்சித் தேர்தல், 3 ஆண்டுகளுக்குப் பின்னர், 2019 இறுதியில், அதுவும் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே நடைபெறுவதில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
தேர்தல் பணியில் உள்ள மாவட்ட கலெக்டர் தொடங்கி, அனைத்து அதிகாரிகள் மீதும் தி.மு.க.வுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கடமை தவறாமல் தங்கள் ஜனநாயகப் பணியை பயமின்றி, பாரபட்சமின்றி நிறைவேற்றிட வேண்டும்.
ஆளுங்கட்சியின் தில்லு முல்லுகளுக்கு உடன்போகக் கூடியவர்கள், ஆட்சி மாற்றம் ஏற்படும்போது சட்டத்தின் முன் நிற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டே தீரும் என்பதை நிச்சயம் மறக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
நம்பிக்கை பெருகியிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காகக் காத்திருக்கிறது.
தி.மு.க. வேட்பாளர் போட்டியிடும் இடமாக இருந்தாலும், தோழமைக் கட்சியினர் போட்டியிடுகின்ற இடமாக இருந்தாலும், வெற்றி ஒன்றே குறிக்கோள். வேறெதுவும் நம் கவனத்தைச் சிதறடித்துவிட அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



