ரயில் நிலையங்களில் குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் சென்னை செண்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை ரூ. 50 என இப்போது இருக்கும் கட்டணத்தில் இருந்து 5 மடங்கு உயர்த்தியுள்ளது ரயில்வே நிர்வாகம்!
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. மற்ற உலக நாடுகளில் பரவும் வேகத்தில் இந்தியாவில் இல்லை என்றாலும், அடுத்து வரும் இரு வாரங்களில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அரசு எடுத்து வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மக்கள் அதிகம் வந்து செல்லும், ரயில்களிலும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தென்னக ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடைகளை பயன்படுத்துவற்கான கட்டணத்தை 5 மடங்காக அதிகரித்துள்ளது.
தற்போது நடைமேடை கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் 10 மடங்காக வசூலிக்க முடிவு செய்துள்ளது ரயில்வே நிர்வாகம். அதாவது ரூ.50 வரையில் வசூலிப்பது என்றும், இந்த கட்டண உயர்வு வரும் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுபோல் மேற்கு ரயில்வே யும் அறிவித்துள்ளது குறிப்பாக வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 17 இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் இந்த கட்டண உயர்வு அமல் படுத்தப் படுவதாக கூறப்பட்டுள்ளது