தில்லியில் நடைபெற்ற தப்ளீக் இ ஜமாஅத் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 7 பேர், குற்றாலத்தில் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி, அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றாலம் பேரூராட்சியில் திரண்டு சென்று மனு அளித்தனர்.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று (கோவிட்-19) பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியில் தில்லியியில் நடைபெற்ற மதபோதனைக் கூட்டத்தில் சுமாா் 8,000 போ் பங்கேற்றனா். வெளிநாட்டினரும் பல மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
அவா்களில் சுமாா் 30 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 3-க்கும் அதிகமான நபா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவா்களைக் கண்டறிந்து அவா்களைப் பரிசோதிக்கும் பணியில் மாநில அரசுகள் தீவிரமுடன் செயல்பட்டன.
இந்தச் சூழலில் இந்த மத போதனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியலை தமிழக உளவுத்துறை தயாரித்து வருகிறது. மேலும், தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டுமென மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்பியவர்களை அடையாளம் கண்டு சிகிச்சைக்கு சேர்த்து வருகின்றனர்.
தில்லியியில் நடைபெற்ற மதபோதனைக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு திருவாரூர் திரும்பிய 26 பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரிடமும் சளி, உமிழ்நீா், ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்திலிருந்து முடிவு உறுதி செய்யப்பட்டால்தான் கொரோனா தொற்று உறுதி என அறிவிக்க முடியும் என திருச்சி அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 26 பேரில் 13 பேர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே போல் திருச்சி, ஈரோடு உள்ளிட்ட நகரங்களிலும் கொரோனோ தொற்று அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப் பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு, அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன.
இதனிடையே நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, வல்லம் கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதனிடையே குற்றாலம் பகுதிகளில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் தங்க வைக்கப் பட்டுள்ள இடத்தை அடுத்து உள்ளவர்கள், அவர்களை அங்கிருந்து அகற்றி வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என மனு கொடுத்து வருகின்றனர்.