தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அது ஆரஞ்சுக்கு மாறியது. அதே நேரம், ஆரஞ்சு மண்டலமாக இருந்த நீலகிரி, கடந்த 21 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்ததால், தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மட்டுமே பச்சை மண்டலத்தில் இருந்தது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வேப்பனஹள்ளி அருகேயுள்ள நல்லூரைச் சேர்ந்த 67 வயது நபருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி, ஆரஞ்ச் மண்டலத்திற்கு மாறியுள்ளது.
கிருஷ்ணகிரியின் நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பியுள்ளார். அவருடன் 3 பேர் சென்றுள்ளனர். வந்த இடத்தில் அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் அவருடன் சென்ற 3 பேர் மற்றும் அவரின் உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோன்று கொரோனா பாதித்த நபரின் நல்லூர் கிராமத்திற்கும் ‘சீல்’ வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊருக்கு உள்ளே செல்வதற்கோ அல்லது ஊரில் இருந்து வெளியே போவதற்கோ தடை விதிக்கப்படுகிறது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும், கடந்த 21 நாட்களாக அந்த மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லாததால் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது