
மதுரை: மதுரை நகரில் மாட்டுத்தாவணி, கே.கே.நகர் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு தள்ளு, முள்ளு இல்லாமல் போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடைபெற்றது.
இருப்பினும், கொரோனாவுக்கு பயந்து கூட்டம் குறைந்து காணப்பட்டது. தமிழக அரசு சென்னை தவிர பிற மாவட்டங்களில் அரசு மதுபானக்கடைகளை திறக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மக்கள் அச்ச உணர்வுடனே டாஸ்மாக் கடைகளுக்கு வந்திருந்ததைக் காண முடிந்தது.
மக்கள் கூட்டமாக வரக் கூடாது என்பதற்காக தடுப்புகள் நெருக்கமாக அமைக்கப் பட்டிருந்தன. மேலும் பாதுகாப்புக்கு போலீஸார் கடை முன்பாக குவிக்கப் பட்டிருந்தனர்.

இருந்த போதிலும் இன்று அரசு மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்தனர். பல கடைகளில் கூட்டமானது குறைந்து காணப்பட்டது. மேலும், போலீஸார் கடையின் வாசலிலே, மாஸ்க், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே, மதுபிரியர்களை கடைக்குள் கண்டிப்பாக அனுமதித்தனர்.
கடை முன்பாக இரு சக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. வரிசையாக வரும்படி ஓலி பெருக்கி மூலம் போலீஸார் எச்சரித்தனர்.

இதேபோல் மதுரை கரும்பாலை, கே.கே. நகர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் நீண்ட வரிசையில் நிற்க வைத்து பொருட்களை வழங்கினர்.
மக்கள் கையில் பணப்புழக்கம் குறைவு காரணமாகவும், நோய் தாக்கம் காரணமாகவும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்திருக்கலாம் என்றார், கோமதிபுரத்தைச் சேர்ந்த ஆர்.ரவி.
ஆதார் அட்டையின் பயன்பாடு மது விற்பனை வரை வந்துவிட்டதாகவும், வங்கி முதல் டாஸ்மாக் வரை ஆதார் தான் என்று கூறினர் சமூக ஆர்வலர்கள்!
- செய்தியாளர், ரவிச்சந்திரன், மதுரை