ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தமிழக அரசு மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், மதுக்கடைகளுக்கு முன் இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஆங்காங்கே போராட்டம் நடத்தப் படும் என்று கூறியிருந்தார். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்து அவரை கைது செய்தனர்.
இது குறித்து அர்ஜுன் சம்பத் தெரிவித்த போது….
தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.
டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், கரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த கோரியும், திருக்கோயில்களை உடனடியாக திறந்து பக்தர்கள் தரிசனம் செய்யவும் பூஜைகள் நடைபெற வழிவகை செய்யவும் வலியுறுத்தி இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்திருந்தோம்.
இன்று சத்யாகிரக போராட்டம் காலையிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருக்கிறேன்! இப்பொழுது என்னை கைது செய்து செல்வபுரம் காவல் நிலையம் அழைத்துச் செல்கிறார்கள்!
நமது சத்தியாக்கிரக போராட்டம் வெல்லும்! மதுக்கடைகள் மூடப்படும்! தமிழகம் காப்பாற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.