
நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியின் ஜமீந்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீர்த்தபதி, தமது 89 ஆம் வயதில் இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.
மாஞ்சோலை உட்பட பல இடங்களுக்கு அதிபதியான #சிங்கம்பட்டிஜமீன், தென்னாட்டு புலி ராஜா #முருகதாஸ்தீர்த்தபதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சிங்கம்பட்டி ஜமீனுக்கு என்று தனித்துவ அடையாளமும் வரலாறும் உள்ளது. சுதந்திர இந்தியாவில் முடி சூட்டப்பட்ட ஒரே மாமன்னர் என்ற பெருமையைப் பெற்றவர் சிங்கம்பட்டி ஜமீன்.

நெல்லைச் சீமை என்று அழைக்கப் படுவதற்கும், சிங்கம்பட்டி சீமை என்று சொல்லப் படுவதற்கும் பெயர்ப் பொருத்தமாகத் திகழ்ந்தவர் சீமை ராஜா முருகதாஸ் தீர்த்தபதியார். தமிழின் மீதான பற்றும் தேசபக்தியும் , தெய்வ பக்தியும் பேச்சாற்றலும் பலராலும் இன்றளவும் நினைவு கூரப் படுகிறது.
தமிழின் மீது தணியாத தாகம் கொண்டவர். சிறந்த கவிஞர். தத்துவ தரிசனங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல்வேறு அறநெறிக் கருத்துகளைத் தொகுத்து அவ்வப்போது சிறு சிறு வெளியீடுகளாகவும் பதிப்பித்து அளிப்பார்.

இங்கிலாந்தில் கல்வி பயின்ற அனுபவங்களைக் கொண்டவர். முக்கியமாக, பசும்பொன் தேவர் திருமகனாருடன் நெருங்கிய நட்பு பூண்டிருந்தவர். மிகச் சிறந்த பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தவர். நெல்லைச் சீமையின் நல்ல ஆத்மா இன்று இறைநிழலில் ஐக்கியமாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சிங்கம்பட்டி ஜமீன். இதன் 32-வது பட்டத்துக்காரர் நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி இயற்கை எய்தினார்
உடல் நலக்குறைவு காரணமாக அவரது வீட்டிலேயே உயிரிழந்தார்.
ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.