
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அரசு மதுபானக்கடையில் சுவரை உடைத்து 48 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை ‘மர்ம நபர்கள்’ திருடிச் சென்றுள்ளனர்.
தேவகோட்டை ஆற்றுப் பாலம் அருகில் உள்ள 7509 கடை எண் கொண்ட டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று விற்பனை முடிந்து சேல்ஸ் மேனேஜர் முத்துசாமி கடையைப் பூட்டி விட்டுச் சென்றனர்.
இன்று காலை 10 மணி அளவில் கடையைத் திறந்து பார்த்த போது கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளை இட்டிர்ப்பதைக் கவனித்திருக்கிறார். மேலும், கடையின் உள்ளே மதுபான பெட்டிகள் சிதறிக் கிடந்ததையும், சுமார் 48,000 மதிப்பிலான மது பாட்டில்கள் திருடு போனது கண்டும் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தேவகோட்டை உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், நகர் காவல்துறை ஆய்வாளர் பேபிஉமா, சார் ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், திருமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சிவகங்கை கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். திருடர்கள் கடையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் இருந்த டின்பீர்களை சாவகாசமாக அருந்தி விட்டு சென்று உள்ளதும் அப்போது தெரியவந்தது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை