
கமலேஷ்வர் முகர்ஜி, மேற்கு வங்கத்தின் பிரபல திரைப்பட இயக்குநர். கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்திருந்தாலும் திரைத்துறையில் ஆர்வம் இருந்ததால் முதலில் விளம்பரத் துறையில் பணியாற்றினார். திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதினார். உரோ சித்தி என்கிற வங்காளப் படத்தை 2011-ல் இயக்கிப் பாராட்டுகளைப் பெற்றார். 2013-ல் சந்தர் பஹார் என்கிற பிரமாண்டமான படத்தை இயக்கி அதிகமாக வசூலித்த வங்காளப் படமாக அதை மாற்றிக் காட்டினார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்பட இயக்குநர்கள் அனைவரும் வீட்டில் அமர்ந்து அடுத்த படங்களுக்கான கதை, திரைக்கதை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, கமலேஷ்வர் வீட்டை விட்டு வெளியே வந்து ஸ்டெத்தைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு கிராமத்து மக்களுக்கு மருத்துவச் சேவை அளித்துக் கொண்டிருக்கிறார்.

மேற்கு வங்க கிராமங்களுக்கு மருத்துவக் குழுவுடன் சென்று மருத்துவ முகாமில் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவராகச் சிகிச்சையளித்து வருகிறார் கமலேஷ்வர். நடிகர்களுக்குப் பொறுமையாகக் கதை சொல்வது போல நோயாளிகளுக்குப் பொறுமையாக நோயின் தன்மைகள் குறித்து விளக்கமளிக்கிறார். ஒரு திரைப்பட இயக்குநர் மருத்துவராகப் பணியாற்றுவதை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தாலும் எதிலும் கவனம் சிதறாமல் தனது சேவையைத் தொடர்கிறார்.
இதுபற்றி ஒரு பேட்டியில் கமலேஷ்வர் கூறியதாவது:

இது மகிழ்ச்சியான நேரமல்ல. மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் மேற்கு வங்கம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது சாக்குப்போக்குச் சொல்லாமல் உங்கள் திறமையை அவர்களுக்காகப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது. எழுதத் தெரிந்தவர்கள் மின் புத்தகம் மூலமாக வருமானம் பெற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு வழங்குகிறார்கள்.
ஓவியர்கள் ஓவியங்களை விற்று அதை வைத்து நிதியுதவி அளித்து வருகிறார்கள். நான் ஒரு மருத்துவர். இந்தச் சமயத்தில் அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்கப்படவேண்டும். சுந்தர்பன்ஸ் போன்ற பகுதிகளில் குடிநீர், சுகாதாரம் இன்றி மக்கள் தவிக்கிறார்கள். என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.