
விஜய் தொலைக்காட்சியின் “கலக்கப்போவது யாரு சீசன் 4” நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி. கெட்டப் மன்னன் என்று சொல்லும் அளவிற்கு விதவிதமான கெட்டப்புக்களில் அசத்தியவர்.
அது இது எது” நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு ரவுண்டில் மற்றவர்கள் எல்லாம் பேசி, பேசி தான் சிரிக்க வைக்க முடியும். ஆனால் வடிவேல் பாலாஜி வந்து நின்றாலே 3-ல் 2 பேர் சிரித்துவிடுவார்கள்.
இப்படி வயிறு குலுங்க நம்மை எல்லாம் சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி நேற்று உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு பணமின்றி உயிரிழந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் வடிவேல் பாலாஜிக்கு கை, கால் செயலிழந்தன. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒரு கட்டத்திற்கு மேல் சிகிச்சைக்கு பணமில்லாததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்டார்.

இதற்கு முன்னதாகவும் பணப்பிரச்சனை காரணமாக வடிவேல் பாலாஜி குடும்பத்தினர், சிகிச்சைக்கு பணமின்றி தனியார் மருத்துவமனைகளை மாற்றியதாக கூறப்படுகிறது.
நேற்று அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட உடனேயே வடிவேல் பாலாஜியின் உயிர் பிரிந்தது. மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு வடிவேல் பாலாஜி திடீரென உயிரிழந்தது ரசிகர்களையும், திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து சேத்துப்பட்டில் உள்ள இல்லத்தில் வடிவேல் பாலாஜி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான ரசிகர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக இருக்கும் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் என அறிவித்துள்ளார்.