தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் நவ.14ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தீபாவளி என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை பட்டாசு மத்தாப்பு ஆகியவற்றை கொளுத்தி தீபாவளி கொண்டாடுவது வழக்கம்
ஆனால் சுற்றுச்சூழல் விதிமுறைகளை காரணம் காட்டி பட்டாசு வெடிப்பதை தடை செய்தது உச்சநீதிமன்றம் இருப்பினும் பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைத்து அறிவித்தது நீதிமன்றம் அதன்படி கடந்த வருடம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது
இந்த முறையும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரமானது இரண்டு மணி நேரம் மட்டுமே என்று அறிவிக்கப் பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மக்கள் மாசில்லாத தீபாவளியை கொண்டாடி நாட்டிற்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.