
வெற்றிவேல் யாத்திரைக்கு கட்டுப்பாடுகளுடன் திடீரென அனுமதி வழங்கியுள்ளது மாநில அரசு இதை அடுத்து பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்
முன்னதாக, வேலுடன் ”வெற்றிவேல் யாத்திரை” செல்ல முயன்ற பாஜகவினரை நசரத்பேட்டையில் தடுத்து நிறுத்தியது தமிழக காவல்துறை! இருப்பினும், பாஜக., தலைவர் முருகனுடன் ஐந்து வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கியது. வேல் யாத்திரை வாகனத்துடன் எல்.முருகன் திருத்தணி நோக்கி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகப் படுத்தியது.
வேல் யாத்திரைக்காக திருத்தணி நோக்கிச் சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை முதலில் தடுத்து நிறுத்திய காவல்துறை பின் திடீரென அனுமதி அளித்தனர். பூந்தமல்லி அருகே எல்.முருகனை தடுத்து நிறுத்தக் காத்திருந்த காவல்துறையினர், வேல் யாத்திரை பிரசார வாகனத்துடன் 6 வாகனங்கள் உடன் செல்ல அனுமதி அளித்தனர்.இதனால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வேல் யாத்திரையில் வாகனத்தில் அறுபடை வீடுகளுக்கும் 6 வேன்களில் செல்ல அரசு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். யாத்திரைக்கு முதலில் அனுமதி மறுத்த நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வேல் யாத்திரை வெற்றிவேல் யாத்திரையாக மாறியுள்ளது என்று பாஜக.,வினர் கூறினர்.
எனினும், கோயிலில் வழிபடச் செல்வதாக பாஜக., தலைவர் குறிப்பிட்டதால், வழிபாட்டுக்கு எவர் வேண்டுமானாலும் செல்லலாம் என்றும், யாத்திரையாக மட்டுமே செல்லக்கூடாது என்றும் கூறிய போலீஸார், குறைந்த நபர்களுடன் கோயிலுக்குச் செல்ல அனுமதிப்பதாகக் கூறினர். எனவே வேல்யாத்திரைக்கு அனுமதி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், வழிபடுவதற்கான அனுமதி என்று மட்டுமே சொல்லலாம் என்றும் குறிப்பிட்டனர்.

முன்னதாக, தமிழகத்தில் தடையை மீறி யாத்திரையை நடத்தவும், கைது செய்தால் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் பாஜக., திட்டமிட்டிருந்தது.
திட்டமிட்டபடி யாத்திரையை தொடங்குவோம் என்றும், யாத்திரையை தொடங்கும் போது போலீசார் கைது செய்தால், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக., தலைமை உத்தரவிட்டிருந்தது. யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டால் ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்றும், இல்லாவிடில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் அளிக்கப் பட்டிருந்தது.