
தடை அதை உடை… வெற்றி வேல் வீரவேல் என்ற முழக்கத்துடன், வேல்யாத்திரையை திருத்தணியில் இருந்து தொடங்க பாஜக., தலைவர் முருகன் திருத்தணி நோக்கி புறப்பட்டார்.
பாஜக., சார்பில் நடைபெறும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. கொரோனோ பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந் நிலையில், தடையை மீறி தமிழக பாஜக., சார்பில் நவ.6 முதல் டிச.6 வரை திருத்தணியில் தொடங்கி, திருச்செந்தூரில் முடிப்பதாக ‛வேல் யாத்திரை’ திட்டமிடப் பட்டுள்ளதாக தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.
முன்னதாக, கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ‛வேல் யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்குப் பின் வழக்கு தொடரலாம்,’ எனக் கூறி வேல்யாத்திரைக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.
இருப்பினும், தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்க உள்ளதாக நேற்று பாஜக., தமிழக தலைமை அறிவித்தது. இதை அடுத்து இன்று காலை, கையில் வேலுடன் கோயம்பேட்டில் இருந்து கிளம்பினார் பாஜக., தமிழக தலைவர் எல்.முருகன். அவருடன் பாஜக., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் தொண்டர்கள் சூழ காரில் அணிவகுத்துச் சென்றனர்.
இந்த யாத்திரை குறித்து எல்.முருகன் குறிப்பிடுகையில், ‛கடவுளை வழிபடுவது எனது அடிப்படை உரிமை. அந்த அடிப்படையில் திருத்தணிக்குச் செல்கிறேன். கடவுள் முருகனின் துணை கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்குகிறோம்,’ என்றார்.

முன்னதாக, இன்று திருத்தணியில் பாஜக., தலைவர் கைது செய்யப்படும் பட்சத்தில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பெருமளவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக., திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.