பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன், 11 மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
பீகார் முடிவுகள் இழுபறி நிலையைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. பாஜக., நிதிஷ் குமாரின் ஐ.ஜ.த இணைந்த தேஜகூ ஓரிரு தொகுதிகள் முன்னிலை பெற்று முன்னணியில் இருந்தாலும், வெற்றிக்கு இடையிலான ஓட்டுகள் வித்தியாசம் குறைவாக இருப்பதால், தொடர்ந்து பல தொகுதிகளில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இத்தகைய அரசியல் பரபரப்புக்கு இடையே பாஜக., இடைத்தேர்தல்களில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளில் 6 இடங்களில் பாஜக, ஒரு இடத்தில் சமாஜ்வாடி வெற்றி பெற்றன. இதன் மூலம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள செல்வாக்கை பாஜக., தக்க வைத்துக் கொண்டுள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற 8 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்று, முழுமையான வெற்றியை ருசித்துள்ளது.
மணிப்பூரில் நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஏற்கெனவே போட்டியின்றி ஒரு தொகுதி பெற்றிருந்த பாஜக., தற்போது தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 3 ஐக் கைப்பற்றி வெற்றியை ஈட்டியுள்ளது.
இதேபோன்று கர்நாடக கர்நாடக இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு நடந்த ஆர்.ஆர். நகர் மற்றும் சிரா ஆகிய 2 தொகுதிகளிலும் ஆளும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் டுப்பக்கா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக., வேட்பாளர் ரகுநந்தன் ராவ் வெற்றி பெற்று, அங்கும் தன் முத்திரையைப் பதிவு செய்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில், 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், 12 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக., 7 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. அதன் மூலம், ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதே நேரம், ஜார்கண்டில் 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்க்ரஸும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் தலா ஒரு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன
நாகாலாந்தில் 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் என்.டி.பி.பி., வேட்பாளர் மற்றும் சுயேட்சை தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் மார்வாஹி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.