சோழவந்தான், உசிலம்பட்டி, மதுரை கிழக்கு உள்ளிட்ட புறநகர் சட்டமன்றத் தொகுதிகளைக் குறிவைத்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது பாஜக.
மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளில் உள்ள உசிலம்பட்டி சோழவந்தான் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் பாஜக களமிறங்கியுள்ளது. இதன் முன்னோட்டமாக உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கருமாத்தூர் முனுசாமி கோவிலில் கடந்த அமாவாசை அன்று சிறப்பு பூஜை செய்தது.
உசிலம்பட்டியில் பாஜக களமிறங்கும் முயற்சியின் முதல் கட்டமாகவும் முன்னோட்டமாகவும் அந்த நிகழ்ச்சியை அமைத்துக் கொடுத்தது அப்பகுதி பாஜக நிர்வாகிகள்.
அதேபோல் தற்போது இந்த மாதம் அமாவாசை அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமாக சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் முதன் முதலாக பாலமேடு அருகே உள்ள வலையபட்டி மஞ்சமலை சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்குவது வழக்கம் .
ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக சோழவந்தான் தொகுதியை தங்கள் வசம் ஆக்க முயற்சிகள் மேற்கொள்வது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அனைவரும் மாநில பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமன் தலைமையில் இன்று மஞ்சமலை சுவாமி கோவிலில் அமாவாசை பூஜை செய்து வழிபட்டனர்.
அப்பகுதியில் உள்ள நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து சோழவந்தான் தொகுதியில் தேர்தல் பணிகளை துவங்க வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாஜக அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டு அதிமுக வசம் உள்ள தொகுதிகளை குறிவைத்து தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக அதிமுக வசம் உள்ள தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது ஆளும்கட்சி வட்டத்தில் பெரும் கிலியை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறப் படுகிறது.
தற்பொழுது அலங்காநல்லூர் ஒன்றியத்திலுள்ள 37 ஊராட்சிகளில் 20க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக சார்ந்த தலைவர்களாக உள்ளனர் . மேலும் மீதமுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரும்பாலும் அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக உள்ளனர்.
இதில் தற்போது கோடாங்கிபட்டி மாணிக்கம்பட்டி தெ.மேட்டுப்பட்டி உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆளுங்கட்சி மீது உள்ள அதிருப்தியின் காரணமாகவும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆறு மாத காலத்திற்கு மேலாக அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற நிதி ஒதுக்காத அரசின் மெத்தன போக்கு காரணமாகவும், தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது நம்பிக்கை கொண்டு அந்த கட்சியின் இணைவதற்காக 3 ஊராட்சி மன்ற தலைவர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மேலும் பல ஆளும் கட்சி எதிர்க் கட்சி உள்பட, வேறு சில அமைப்புகளை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் பாஜகவில் இணைய உள்ள நிலையில், இந்த விழாவினை அலங்காநல்லூர் பாலமேடு பகுதியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கான பணிகளில் பாஜகவை சேர்ந்த முத்துராமன், விவசாயி அணி மாநில துணைத் தலைவர், ரமேசன் செல்வராஜன்-கீழச்சின்னணம்பட்டி கிராம ஊராட்சித் தலைவர், தர்மராஜா-ஊராட்சி துணைத் தலைவர், அழகுமணி- தேவசேரி ஊராட்சி தலைவர், கிருஷ்ணகுமார்- ஐ.டி அணி மாநில செயலாளர், தங்கதுரை- பாஜக அலங்கை வடக்கு ஒன்றிய தலைவர், செந்தில்- புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் ஆர்வம் காட்டி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.