
சென்னை பூந்தமல்லி சாலையில் பலத்த காற்றில் தகரம் பறந்து வந்து விழுந்து விபத்து .. ஏற்பட்டுள்ளது. புயல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, சாலையில் பைக், இரு சக்கர வாகனங்களில் செல்வதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்… என்ற வாசகங்களுடன் இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
இந்த காட்சி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் என்று குறிப்பிடப்பட்டு வீடியோ பரவினாலும் இது முன்னர் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்று கூறப்படுகிறது எனினும் இதில் உள்ள எச்சரிக்கை செய்தி மட்டுமே இப்போது நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதால் வாட்ஸ்அப் வாயிலாக பரவி வரும் இந்த காட்சியை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்..
இதே வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நடந்த விபத்து போல் வைரலாகியது. ஆனால் இது நடந்தது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் என்பது தெரியவந்தது. இப்போது இதே வீடியோவை பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று சென்னையில் நடந்ததாகக் கூறி வாட்ஸ்அப் வாயிலாக பரப்பி வருகிறார்கள்.
நிவர் புயல் நகரத் தொடங்கியுள்ளது. மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது; இது வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும்! அதி தீவிர புயலாக மாறி, கரையைக் கடக்கும் என்றும், மணிக்கு 120 முதல் 130 கிமீ., வரை காற்று வீசக்கூடும் என்றும், சில நேரத்தில் 145 கிமீ., வேகம் வரை காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அருகே நாளை மாலை நிவர் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும்! புயலின் கண் பகுதி புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும். இதனால், சென்னை மற்றும் புறநகரில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது… என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முன்னதாக, நிவர் புயல் இன்று காலை முதல் மதியம் வரை ஒரே இடத்தில் நிலை கொண்டு இருப்பதால் புயல் வலுவிழக்குமா, புயல் திசை மாறுமா போன்ற கேள்விகள் எழுந்தன! இதற்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பதிலளித்தார்.
இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், புதுச்சேரிக்கு கிழக்கு, தென்கிழக்கில் 410 கிமீ., தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிமீ., தொலைவிலும் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது.!தற்போது அதன் நகரும் வேகம் குறைந்து உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக வலுப்பெறும். காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே நாளை மாலை கரையைக் கடக்க கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளில்பெரும்பாலான பகுதிகளிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக் கூடும்.
நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை முற்பகல் முதல் இரவு வரை 110 முதல் 120 கிமீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலைதான் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. நேற்று காலை அது 25 கிமீ., வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது. அதன் பிறகு காலை 11.30க்கு, 11 கிமீ., வேகத்தில் நகர்ந்தது. நேற்று மாலைக்குப் பின்னர், 4 கிமீ., வேகத்தில் நகர்ந்து தற்போது நிலையாக நிற்கிறது.

இப்போது இலங்கை நிலப் பிராந்தியத்துடன் புயல் தொடர்பில் உள்ளது. புயல் நிலையை மாற்றும் போது நகரும் வேகம் குறையும். வேறு நிலப்பகுதியுடன் தொடர்பு கொள்ளும்போது புயல் நகரும் வேகம், ஏற்ற இறக்கத்தோடு காணப்படும்.
நிவர் புயல் தீவிர புயலாக மாறக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. அது தீவிர புயலாக மாறிய பிறகு அதன் வேகம் அதிகரிக்கும். சற்று நேரம் நிலையாக நின்று, வலுப்பெற்ற பிறகு அது நகர்ந்து வரும்.
புயல் திசை மாறாதுபுயல் நிலையாக இருப்பதற்கும், நகரும் வேகத்திற்கும், புயல் திசைமாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. புயலின் இயல்பில் வேண்டுமானால் மாற்றம் வரும். அதாவது வலுப்பெறும் அல்லது வலுவிழக்கும். ஆனால் புயலின் திசையை, அது நகரும் வேகம் தீர்மானிப்பதில்லை. எந்தப் புயலும் ஒரே சீரான வேகத்தில் நகராது. சுற்றுப்புறச் சூழ்நிலை உள்ளிட்டவை அடிப்படையில்தான் புயல் நகரும் வேகம் இருக்கும்.
புதுச்சேரி தான் புயல் செல்லக் கூடிய நடுக்கண் பகுதியாக உள்ளது. சென்னையில் காற்றின் தாக்கம் இருக்கக்கூடும். அதிக பட்சம் 80 கிமீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்… என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.