கேரள மாநில பாஜக., பிரசார வாகனம் மீது திமுக.,வினர் தாக்குதல்! செங்கோட்டை அருகே பரபரப்பு!

Published:

kerala-bjp-protest-in-puliyarai
kerala-bjp-protest-in-puliyarai

தமிழக கேரள எல்லையில் கேரள மாநில பாஜக.,வினரின்  பிரச்சார வாகனம் மீது ‘மர்ம’ நபர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

கேரளாவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்வதற்காக, கேரள பா.ஜ.க.வின் பிரச்சார வாகனம் அச்சன்கோவிலில் இருந்து ஆரியங்காவு வரும்போது, தமிழ்நாடு எல்லையில் திமுக.,வைச் சேர்ந்த சிலர் பா.ஜ.க. கொடிகளை கிழித்தும், பிரச்சார வாகனத்தை சேதப்படுத்தியும் உள்ளனர். இது தொடர்பாக, காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால் நாளை தென்காசியில் பா.ஜ.க., சார்பில் மாவட்ட அளவில் போராட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக., எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள அச்சன்கோவில் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு, தமிழகத்தின் செங்கோட்டை சாலை வழியாக, கேரள மாநிலத்தில் உள்ள ஆரியங்காவு பகுதிக்குச் சென்றுள்ளனர். அச்சன்கோயிலில் இருந்து ஆரியங்காவுக்குச் செல்ல தமிழகத்தின் செங்கோட்டை வழியிலான இந்த ஒரு பாதைதான் உள்ளது. 

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

இவ்வாறு திரும்பிச் சென்ற பாஜக., பிரசார வாகனத்தை கட்டளைக்குடியிருப்பு அருகே  கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களைக் கொண்ட கும்பல் ஓன்று தடுத்து நிறுத்தியது. தகாத வார்த்தைகளைப் பேசி, அந்த ஜீப்பில் இருந்த கொடிகளைக் கிழித்தும்,வாகனத்தின் முன்பு இருந்த சின்னத்தைக் கிழித்து  எறிந்தும் வன்முறையில் ஈடுபட்டது. மேலும், வாகனத்தில் வந்த ஓட்டுநர் சுபாஷ் மற்றும், அதில் இருந்த இன்னுமொரு நபரையும் தாக்க முயன்றது.

இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த அவர்கள், சத்தம் போட்டுள்ளனர். இதை அடுத்து தகவல்   செங்கோட்டை போலீசாருக்குச் சென்றது. 

தகவலை அடுத்து விரைந்து வந்த செங்கோட்டை போலீஸார், நடந்த சம்பவம் குறித்து கேரள ஜீப் டிரைவரிடம்  விசாரித்தனர்.  

அப்போது, அந்த ஜீப், அச்சன்கோவில் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு செங்கோட்டை வழியாக ஆரியங்காவு செல்வதும், அந்த வாகனத்தை வழிமறித்து கொடிகளைக் கிழித்து எறிந்தது  திமுக.,வினர் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்களின் வாகனத்தில் திமுக கொடி  இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

இந்தச் சம்பவம் காரணமாக தமிழக கேரள எல்லையான கோட்டைவாசல்  பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஏராளமானோர் திரண்டு வந்தனர்.  தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்த பாஜக.,வினர்  திட்டமிட்டனர். 

இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு வந்த செங்கோட்டை காவல் ஆய்வாளர்  (பொறுப்பு) பாலமுருகன், தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தின் ஓட்டுநர் சுபாஷ், மற்றும் அவருடன் வந்த நபரையும் புளியரை, கோட்டைவாசல் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று அடையாளம் காட்டுமாறு கூறினர். அப்போது செங்கோட்டை திமுக., ஒன்றியச் செயலாளர் ரவிசங்கர் உள்ளிட்ட நபர்களை அடையாளம் காட்டியதாகக் கூறப் படுகிறது. 

இதை அடுத்து சம்பந்தப் பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது. 

இந்தச் சம்பவத்தின் காரணமாக கேரள தமிழக எல்லைப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கோட்டைவாசல் பகுதியில் தமிழக -கேரள போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இரு மாநில எல்லைப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால்  பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. 

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இதனிடையே, பாஜக., உள்ளிட்ட சில இந்து இயக்கங்களும் திமுக.வினரின் வன்முறைச் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் என்று அறிவித்ததால் தென்காசி மாவட்ட போலீஸார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img