சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா நடராஜன், தற்போது பயனுள்ள ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் கர்நாடக மாநில சிறையில் இருந்த காலத்தில், அம்மாநிலத்தின் மொழியான கன்னடத்தைக் கற்று, அதில் மூன்றாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளாராம்!
சட்ட விரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் காலம் கழித்து வரும் சசிகலா நடராஜன் (69) தற்போது தண்டனைக் காலம் முடிந்து வெளிவரத் தயாராக உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் அம்மாநில மொழியைக் கற்று, தனது அரசியல் வாழ்க்கைக்கு மேலும் ஒரு படியைக் கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு வந்த புதிதில் மன வருத்தத்துடன் எவருடனும் பேசாமல் ஒதுங்கியிருந்த சசிகலா, பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பி, சிறை ஊழியர்கள், சக கைதிகளுடன் இயல்பாகப் பழகினாராம். இந்நிலையில், சிறையில் இருந்து கொண்டு ஏதாவது கற்க வேண்டும் என்ற ஆவலில் கன்னட மொழியை எழுதப் படிக்க கற்றுக் கொண்டிருக்கிறார் சசிகலா.
கல்வி கற்காத கைதிகளுக்கு கல்வி கற்பிக்க சிறைக்கு வரும் ஆசிரியர்களிடம் கன்னடம் எழுத்துக்களைக் கற்றுள்ளார். பின்னர் கன்னடத்தில் உள்ள செய்திகளைப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் கன்னட மொழித் தேர்வில் மூன்றாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளார். மேலும், இவரது ஆர்வத்தால், இதே சிறையில் உள்ள சசிகலாவின் உறவினர் இளவரசியும் கன்னடம் கற்றுக் கொண்டிருக்கிறாராம்!