
கடந்த தேர்தலில் எஸ்டிபிஐ., என்ற இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியுடன் கூட்டணி வைத்து களம் கொண்ட கமல்ஹாசன், இந்த முறை ஹைதராபாத்தின் ஓவைஸி.. உடன் கைகோர்த்து தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் களத்தில் இதுவரை முஸ்லீம்களின் வாக்குகள் அதிமுக – திமுக என இரு கட்சிகளுக்கும் கூட்டணியில் இருக்கும் ஏதோ ஒரு முஸ்லிம் கட்சிகளின் தயவில் சென்றாலும், பெரும்பாலும் முஸ்லிம்களின் வாக்கு வங்கி திமுகவுக்கே சாதகமாக அமைந்திருந்தது. ஆனால் அடுத்து வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் வாக்கு வங்கி என்பது திமுக.,வுக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது!
அண்மையில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் புதிதாக களமிறங்கி முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு கணிசமான அளவில் ஓட்டும் வாங்கி, 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வென்று, இந்திய அளவில் கவனம் பெற்றார் அகில இந்திய மஜ்லிஸ் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி. இப்போது இவரது முஸ்லிம் ஓட்டு வங்கியை முஸ்லிம் கட்சிக்கே பெற வைக்கும் உத்தியால் தமிழக அரசியலில் களம் பரபரப்பாகி இருக்கிறது.

தெலங்காணா, பீகாரை அடுத்து தனது பார்வையை தமிழகத்தில் பதித்திருக்கிறார் ஓவைஸி. மற்ற இடங்களில் முஸ்லிம் வாக்கு முஸ்லிம் கட்சிக்கு என்ற கோஷத்துடன் இறங்கினாலும் தமிழகத்தில் தனக்கு சாதகமாக உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் அதற்காக அவர் கமலஹாசனுடனும் நாம் தமிழர் கட்சியின் சீமானுடனும் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இவ்வாறு கமல் அல்லது சீமானுடன் கைகோத்து போட்டியிட்டால், தங்களுக்கு 25 இடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என்று ஓவைசி பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது.இப்போது கமல் கட்சி நிர்வாகிகளுடன் ஓவைசி கட்சியின் நிர்வாகிகளும் பேசி வருகின்றனராம் ஏற்கனவே எஸ்டிபிஐ என்ற இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியுடன் கூட்டணி சேர்த்து போட்டியிட்டு இருக்கிறார் கமல். இந்த நிலையில் இம்முறை அதேபோன்று இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ கட்சிகளை இணைத்து சிறுபான்மை கூட்டணி என்று அவர் உருவாக்குவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மதுரையில் நேற்று கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், ”நிறைய பேர் கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் இப்போது சொல்ல முடியாது” என்றார். மேலும், தமது தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு உள்ளதாகவும் கமல் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் கமல் சீமான் ஓவைசி இன்னும் பல சிறுபான்மை கட்சிகள் இணைந்து கூட்டணி வைக்கப்படலாம் என்ற கருத்து தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது. இந்த கூட்டணி எதிர்பார்ப்பு சரியாக அமையவில்லை என்றால் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் மட்டும் போட்டியிட்டு இஸ்லாமிய வாக்கு வங்கியை தன் பக்கம் திருப்ப ஓவைசி முயற்சி செய்வார் என்று தெரிகிறது
ஏற்கனவே ரஜினி கட்சி தொடங்க உள்ள நிலையில் திமுக.,வில் உள்ள பெருமளவிலான ரஜினி ரசிகர்கள் ரஜினி பக்கம் சென்று விடுவர் என்று கூறப் படுகிறது. இந்த நிலையில், தங்களது முக்கியமான வாக்கு வங்கியான இஸ்லாமியர்களின் வாக்குகளையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் திமுக உள்ளது என்கிறார்கள்
இஸ்லாமியர்களுக்காக தனது சொந்த பட்டியல் இனத்தவரின் உரிமைகளை இழந்த போதும், இஸ்லாமிய பாசம் காட்டி வந்த திருமாவளவன் போன்றவர்களின் நட்புக்கெல்லாம் இஸ்லாமியர்கள் செவிசாய்க்க மாட்டார்கள் என்றும், ஓவைஸி பக்கமே சாய்வார்கள் என்றும் அரசியல் களத்தை நன்கு கவனித்து வருபவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.