
சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.
சென்னை ஐஐடி.,யில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து அங்கு சுகாதாரத்துறை செயலர் ஆய்வு மேற்கொண்டார் அதேபோல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கும் சுகாதாரத்துறை செயலர் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஐஐடியில் மேலும் சில மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 550 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.
சுகாதாரத்துறை சார்பாக அனைத்து கல்லூரிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… என்று கூறினார்.
சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.