
- விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைக்கப்படுமா?
- வடிவேல்கரை விவசாயிகள் எதிர்பார்ப்பு
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள, விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என, புறநகர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, வடிவேல்கரை ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 250 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன.
இவற்றில், வடிவேல்கரை மற்றும் விளாச்சேரி கிராமங்களை சேர்ந்த, 100 விவசாயிகள் நெல், வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலத்தின்,கிழக்கு மற்றும் வடக்கில் நிலையூர் கால்வயும், மேற்கே, ஸ்ரீநகர் – கன்னியாகுமரி, தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலமும், தெற்கில், மதுரை – தேனி அகல ரயில் பாதையும் செல்கிறது. இதனால், சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு செல்ல பாதையின்றி உள்ளது.
இதுகுறித்து, விவசாயி, எம்.முத்து விருமாண்டி, 65 கூறியதாவது :
பாதை இல்லாததால், பண்ணை உபகரணங்கள், விவசாய இடுபொருட்கள், விவசாயம் சார்ந்த வாகனங்கள், விவசாய நிலங்களுக்கு செல்ல இயலவில்லை.
தேசிய நெடுஞ்சாலையின் பாலம் அமைக்கப்பட்டது முதல், இந்த விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாததால், ஆண்டுதோறும் விவசாயம் செய்வது கேள்விக்குறியாகி, பல்வேறு பிரச்னைகளை, நாங்கள் சந்தித்து வருகிறோம்.
பிரதான தொழிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், என்னை போன்ற பல விவசாயிகளின் வாழ்வதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது
எனவே, தேசிய நெடுஞ்சாலையின் பாலத்தின் அருகில் அணுகுசாலையோ அல்லது நிலையூர் கால்வாயின் கிழக்கு புறத்தில் இருந்து, விவசாய நிலங்களுக்கு செல்ல பாலமோ அமைத்து தர வேண்டும்.
இதில், அணுகுசாலை அமைக்க, தேவையான இடம், அத்துறை வசம், ஏற்கனவே உள்ளது. பாலம் அமைக்க தேவையான இடத்தை, அரசுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் கோரிக்கையை அரசு, பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.