தவத்திரு சுவாமி நித்யானந்தாவின் நாடான கைலாசாவுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் தவத்திரு நித்யானந்தா சுவாமிகள்.
இது தொடர்பாக வழக்கம் போல் சமூகத் தளங்களில் வெளியிடும் அறிவிப்பாக, சுவாமி நித்யானந்தா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்தப் புதிய வீடியோவில் கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண்ட இலவச விசாவிற்கு விண்ணப்பித்து, அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்து விட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
அந்த வீடியோவில் தவத்திரு நித்யானந்த சுவாமிகள் மேலும் கூறியதாவது:-
கைலாசாவுக்கு வர வேண்டும் என்று விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும்.
மூன்று நாட்களுக்குமேல் எவருக்கும் விசா கிடையாது. ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு இலவசமாக அவர்கள் விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வந்து விட வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.
அதே போன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும்.
கைலாசாவுக்கு வர விரும்பும் நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது.
இந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் என்னுடன் சேர்ந்து இறைவனை வழிபட வாய்ப்பு கிடைக்கும்… என்று தவத்திரு சுவாமி நித்யானந்தர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ இப்போது பரபரப்பாகப் பேசப் படுகிறது.