
மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவியில் தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சத்தைக் காரணம் காட்டி குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, மட்டுமின்றி அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பயணிகள் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தான் சுற்றுலாத்தலங்கள் பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்பட்டன அதுபோல் குற்றாலம் அருவிகளிலும் குளிப்பதற்கு பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது
கடும் கட்டுப்பாடுகளுடன் குற்றாலத்தில் கடந்த மூன்று தினங்களாக சுற்றுலா பயணிகள் ஆனந்தக் குளியல் நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கின் காரணமாக குளிக்க இயலாமல் போயுள்ளதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.