
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பான ஆவணம் தயார் – யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என்று வருவாய்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசினார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிலம் ஒப்படைக்கப் படவில்லை என்ற தவறான தகவலை சொல்பவர்களுக்கு மருத்துவமனை இடம் ஒப்படைக்கப்பட்டதற்கு ஆதாரங்களாக ஆவணங்கள் வருவாய்த்துறையிடம் தயாராக உள்ளது. அதை யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி . உதயகுமார் பேசினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள அம்மா மினி கிளினிக்கை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார்; டிவி கடை, நகைக் கடையை திறந்து வைக்கும்போது நிறைய வாடிக்கையாளர்கள் வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திறந்து வைக்கிறோம்.
ஆனால் அம்மா கிளினிக்கிற்கு யாரும் வரக்கூடாது என்று வேண்டி கொள்கிறேன். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதைத் திறந்து வைக்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையக்கூடிய பகுதியில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது ஆனால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை யாராவது ஒருவர் ஆர்டிஐ தகவல் மூலம் தான் அங்குள்ள நிலையை தெரிந்து கொண்டு மக்களை குழப்பும் வேலையை செய்கிறார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்க வில்லை என தெரிவித்ததாக எல்லோரும் கூறுகிறார்கள். நிலம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது, காசநோய் மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தை வருவாய்த் துறைக்கு மாற்றி மத்திய சுகாதாரத் துறைக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுவிட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே ஒப்பந்தம் தள்ளிப் போயிருக்கிறது, எய்ம்ஸ் வருவதை எவராலும் தடுக்க முடியாது.
ஆர்டிஐ தகவல் கேட்டவர்க்கும் சொல்கிறேன் எதிர்க்கட்சித் தலைவருக்கும், சொல்கிறேன் எய்ம்ஸ் வருவது நிச்சயம் யார் வேண்டுமானாலும் ஆவணங்களை வந்து பார்த்துக் கொள்ளலாம் எய்ம்ஸ் தொடர்பான வருவாய்த்துறை ஆவணம் தயார் நிலையில் உள்ளது என்று பேசினார்.