
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.2,500 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 963 ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு திங்கட்கிழமை வெளியிட்டது.
இந்த திட்டத்தின் படி, குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை உடன் ரூ.2,500 வழங்க ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில், 18,923 இலங்கைத் தமிழர்கள் மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கும் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து 9 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
மேலும், ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.கொரோனா முடக்க காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு, ஆர். பி உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்தத் திட்டத்தின்படி, வரும் 2021 ஜன.4- ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் அரிசி அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன.