
தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி பாசுரம்- 7
விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்
அந்தரத்(து) அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே (7)
பொருள்
தேவலோகத்தில் இருந்து தேவர்கள் அனைவரும் தங்களது பரிவாரத்துடன் வந்து சேர்ந்தனர். இந்திரனும் தனது பட்டத்து யானையுடன் வந்து சேர்ந்தான். ரிஷிகளும் உனது திருக்கோயிலின் வாசலில் வந்து கூடினர். பக்திக் களிப்பில் மயங்கிய மருத் கணங்களும் யக்ஷர்களும் கந்தர்வர்களும் வித்யாதரர்களும் ஒருவரை ஒருவர் முந்தியபடி உன் திருவடி தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டம் பூமியையும் ஆகாசத்தையும் வியாபித்து நிற்கிறது. அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்
இந்திரன் தானும் ஆனையும் – இந்திரனும் அவனது யானையும் (தனது பட்டத்து யானையாகிய ஐராவதத்தின்மீது ஏறி இந்திரன் வந்து சேர்ந்தான்.)
அரும் தவ முனிவர் – ரிஷிகள்
சுந்தரர் – கந்தர்வர்கள்
விச்சாதரர் – வித்யாதரர்கள்
இயக்கர் – யக்ஷர்கள் (பதினெட்டு கணங்களில் ஒரு பிரிவினர்)
நெருக்க, நூக்க – முண்டியடிப்பது
மயங்கினர் – பக்திக் களிப்பில் சுயநினைவை இழந்தனர்
அந்தரம் – ஆகாயம்
பார் – பூமி
கந்தர்வர்கள் தேவலோகப் பாடகர்கள். யக்ஷர்கள் தேவலோகத்தின் பொக்கிஷ அறையைப் பாதுகாப்பவர்கள். (குபேரனும் ஒரு யக்ஷன்தான்.) மருத் கணங்கள் ஒன்பது பேர். இவர்கள் வாயுவுக்குத் துணைபுரிபவர்கள்.
ஆன்மிகம், தத்துவம்
ரிஷி முனிவர்கள் என்ற இரண்டு பதங்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், உண்மையில், ரிஷி என்பது இல்லறத்தில் இருந்து கொண்டே துறவற தர்மத்தைக் குறைவின்றிக் கடைப்பிடித்து வரும் மேலோரைக் குறிப்பது. முனி என்பது திருமணத் தொடர்பு இல்லாத சன்னியாசியைக் குறிப்பது.