
சுனாமி நினைவுகள் …
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
(ஆசிரியர் – கலைமகள், மஞ்சரி)
சுனாமி என்பது ஜப்பானியச் சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை சுனாமி என்பது துறைமுக அலை என பொருள்படும்.
துறைமுகங்களில் ஏற்படும் அலையல்ல சுனாமி என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழில் இதனை ஆழிப்பேரலை என்று சொல்கின்றனர். இந்தோனேஷியாவில் சும்மாங் என்று அழைக்கின்றனர்.
ஆழிப்பேரலைப் பற்றி பண்டைய தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. நில அதிர்வின் விளைவால் கடலில் எல்லை மாறுபடுவதை “நிலம்புடை பெயரினும் நீர்த்தீப் பிறழினும் இலங் குதிரைப் பெருங்கடற்எல்லை தோன்றிலும்–“என்று குறுந்தொகை 373 ஆவது பாடலில் சொல்லப்பட்டுள்ளது.
ஆழிப்பேரலையில் பண்டையத் தமிழகம் உருக்குலைந்ததை இறையனார் அகப்பொருள் உரை மற்றும் அடியார்க்குநல்லான் உரை ஆகியவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
“பெரு நிலங்கிளறினும்” என்ற நற்றிணைப் பாடல் மூலமாகவும், “நிலத்திறம் பெயருங் காலை யாயினும்” என்ற பதிற்றுப்பத்து பாடல் மூலமாகவும், “நிலம் புடை பெயர்வதாயினும்” என்ற புறநானூற்றுப் பாடல் மூலமாகவும் ஆழிப்பேரலையைப் பற்றித் தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது!
கிரேக்க வரலாற்று ஆசிரியர் (கிமு 426)தியுசிடைட்ஸ் சுனாமி ஏற்படுவதற்கான காரணத்தை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற தனது புத்தகத்தில் முதன்முதலாக கூறியுள்ளார் என்று மேலை நாட்டவர் சொல்வார்கள்.
ஆனால் தமிழகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சுனாமியின் தாக்கத்தை அதாவது ஆழிப்பேரலையின் தாக்கத்தை உணர்ந்துள்ளது என்று நம் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லி உள்ளார்கள்.
முதல் தமிழ்ச் சங்கம் சிவபெருமான் தலைமையில் நடந்ததாக நாம் நம்புகிறோம். முதல் தமிழ்ச் சங்க கால தென்மதுரையை கடல் கொண்டது. அதேபோல் இடைச்சங்க காலத்தில் கபாடபுரத்தை கடல் விழுங்கியது.

புகார் நகருக்கு அப்பால் 400 யோஜனை தூரம் நிலப்பரப்பில் இருந்த நாடு நாகநாடு. புகார் நகரில் இருந்து நாகநாடு செல்லும் வழியில் மணிபல்லவம் என்னும் தீவு இருந்தது. இந்த மணிபல்லவம் தீவின் காவல் தெய்வம் மணிமேகலை. கோவலன் மகள் மணிமேகலையைத் தூக்கிச்சென்று காப்பாற்றியதாக கூறுவார்கள்.
நாக நாட்டை வளைவணன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். மணிமேகலை தெய்வம் சாபமிட்டதால் புகார் நகரமும் நாக நாடும் நகரும் கடற்கோளுக்கு இறை ஆயின. இவ்வாறு ஆழிப்பேரலை தமிழ் நிலப் பரப்புகளைக் கடல் கொண்டதாகத் தமிழ் மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குமரிக்கண்டம் என்னும் லெமூரியாக் கண்டம் கடலுக்குள் மறைந்து போனதாக சீனிவாச ஐயர், சேசை ஐயர், ராமச்சந்திர தீட்சதர், தேவநேயப் பாவணர் ஆகிய சரித்திர ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குமரிக்கண்டத்தில் தான் முதல் மனிதன் பிறந்தான். இங்குதான் தமிழ் மொழி பிறந்தது. இன்றைய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் சில சின்னச் சின்ன தீவுகள் அடங்கிய நிலப்பரப்புகள் உடன் குமரிக்கண்டம் இருந்ததாகச் சொல்வார்கள்.
1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வீசிய கடும் புயலின் போது ராமநாதபுரம் கடலோர எல்லையில் தனுஷ்கோடியை கடல் கபளீகரம் செய்து கொண்டது. ஒரு மீனவக் கிராமம் முற்றிலும் அழிந்து போனது.இதற்குக் காரணமும் சுனாமி தான்!
டிசம்பர் 26 ஆம் நாள் 2004-ல் நிகழ்ந்த சுனாமியை தான் இன்றைய தமிழகம் பெரிய அளவில் உணர்ந்தது. அன்று 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் சுமத்திரா தீவின் வட மேற்கு கடற்கரையில் ஏற்பட்டது. இதன் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தமிழகம், பாண்டிச்சேரி, ஆகிய இந்திய பகுதிகளையும் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளில் உள்ள பகுதிகளையும் தாக்கியது.
கடல்நிலத்தடியில் ஏற்படும் பூகம்பம், எரிமலை,விண்கற்கள் நிலப்பரப்பில் விழுவது, பயங்கரமான அணு சோதனைகள் மூலமும் சுனாமி ஏற்பட வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுனாமி உண்டாவதற்கு முக்கிய காரணம் கடலில் ஒரு கணிசமான அளவு நீர் இடப்பெயர்ச்சி செய்வதே ஆகும்.
நாகப்பட்டினம் மற்றும் சென்னை கடற்கரை 2004-ல் பெரிய அளவில் சுனாமியின் போது பாதிக்கப்பட்டது.உயிர் சேதமும் நிறைய இருந்தது.
காலையில் சுனாமி பேரலை எழுந்ததும் அது பெரிய அளவில் சென்னையில் தாக்கத்தை உண்டு பண்ணியது. ஊர் முழுக்க ஒரே மக்கள் கூட்டம். மயிலாப்பூர் நாட்டு சுப்பராயன் தெருவிலிருந்த செங்கோட்டை ஸ்ரீராம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மிக வேகமாக மந்தைவெளி லேன் என் வீடு தேடி பைக்கில் வந்தார். நானும் அவரும் உடனடியாக அகில இந்திய வானொலி பகுதிக்குச் சென்றோம்.
பலர் கதறிக் கொண்டிருந்தார்கள். சிலர் மேல் கடல் மண் படிந்து எழுந்து நடக்க முடியாமல் இருந்ததைக் கண்ணால் கண்டோம். அவர்களை எல்லாம் தூக்கி ஆட்டோவில் ஏற்றி அனுப்பும் பொறுப்பை ஸ்ரீராம் சில தன்னார்வ தொண்டர்களுடன் செய்து கொண்டிருந்தார். ட்ராபிக் நிலைமையை சரிசெய்ய என்னால் ஆன உபகாரத்தை நானும் செய்து கொண்டு இருந்தேன். தமிழக அரசு முழுவீச்சில் இறங்கி முழுமையான பணியை மேற்கொண்டதை எங்கள் கண்களால் கண்டோம்.
ஒரு பத்து மணி அளவில் நானும் செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு செய்தி சேகரிப்பதற்காகச் சென்றோம். அங்கே மக்கள் படும் அவதியை நேரடியாகக் கண்டோம். அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்காக சிலரிடம் உரையாடினோம்.கடலில் கொஞ்ச தூரம் நடந்து வரலாம் என்று எண்ணி நானும் ஸ்ரீராமும் பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்தோம்.
சுமார் 10-40 மணிக்கு பெரிய அலை ஒன்று கிளம்பி கடற்கரையை நோக்கி வருவதை நானும் ஸ்ரீராமும் நேரடியாகக் கண்டோம். பயந்து போய் இருவரும் ஓட்டம் பிடித்தோம். பி டி உஷா அவர்களுடைய ஓட்டத்தை விட எங்களுடைய அன்றைய ஓட்டம் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த அலைதான் உலகம் முழுவதும் அன்று எழுந்த இரண்டாவது பெரிய அலை!!
இன்று நினைத்தாலும் உடல் புல்லரிக்கிறது.அந்தப் பெரிய அலை கடற்கரையை மோதி தன்னை உள்ளிழுத்துக் கொண்டதை வெகு தூரத்தில் இருந்து பார்த்தோம். சாதாரண பெரிய அலையே இப்படி என்றால்….. ஆழிப்பேரலை எப்படி இருக்கும் எங்களுக்குள் பேசிக் கொண்டு கனத்த இதயத்துடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம் செய்திகள் சேகரித்த படி!!
என்னுடைய ஆலோசனையின் பேரில் பவித்திரம் என்னும் தொண்டு நிறுவனத்தை டாக்டர் திருமதி ஜாய்ஸ் திலகம் அவர்கள் நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் மூலம் நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதிக்கு ஜனவரி 2005ஆம் ஆண்டு முதல் வாரம் சென்றோம்.
திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியர் ஸ்ரீனிவாசன், டாக்டர் ஜாய்ஸ் திலகம் மற்றும் நான் அடங்கிய மூவர் குழு நாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை வாழ் மக்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுவதற்காக சிறுசிறு கூட்டங்களை அவர்களுடைய பயத்தைப் போக்குவதற்காக நடத்தினோம்.
சுனாமிக்குப் பின் மக்களின் மனநிலை என்ற ஆய்வினை மேற்கொண்டு தமிழக அரசின் கையில் வழங்கினோம்.
இதற்காக அன்றைய நாகை மாவட்ட கலெக்டர் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள்(இன்றைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலர்) பாராட்டி நற்சான்றிதழை டாக்டர் ஜாய்ஸ் திலகம் அவர்களிடம் வழங்கினார்.
இந்த சுனாமி நாளை என்னால் எந்த ஆண்டும் மறக்க முடியாது!! சுனாமியில் உயிரிழந்தோருக்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.