
- ராம தீர்த்தத்தில் நடந்த கோவில் சிலை தாக்குதல் குறித்து சின்ன ஜீயர் சுவாமி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
- மதம் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்வது யாருக்கும் தகுந்ததல்ல என்று சின்ன ஜீயர் சுவாமி குறிப்பிட்டார்.
- சர்ச், மசூதி மீது தாக்குதல் நடந்தால் கூட இதுபோன்றே எதிர்வினை ஆற்றுவேன் என்றும் கூறினார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ஹிந்து கோவில்களின் மீது வரிசையாக நடந்து வரும் தாக்குதல்கள் குறித்து பிரபல ஆன்மிக குருவான சின்ன ஜீயர் சுவாமி பரபரப்பு விமர்சனம் செய்துள்ளார்.
மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு குறைந்துவிட்டது என்று அவர் கூறினார். அந்தர்வேதி க்ஷேத்திரத்தில் உள்ள ரதம் பற்றி எரிந்தது, ராம தீர்த்தம் கோதண்டராம ஸ்வாமி விக்ரஹத்தின் தலைப்பகுதி சேதப் படுத்தப் பட்டது போன்றவை இதற்கு உதாரணங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

குண்டூர் மாவட்டத்தில் சீதா நகரத்தில் அவர் இது குறித்து உரையாற்றினார். மாநிலத்தில் இதுவரை 50-க்கும் மேலான ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் நேற்று சிங்கரயகொண்டாவில் மற்றுமொரு ஆலயத்தின் விக்ரகங்களை சேதப்படுத்தி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது என்றார் அவர்.
ஆலயங்களில் உள்ள விக்ரகங்களை சேதப்படுத்துவது குறித்து சுவாமிஜி ஒரு நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தார். தனுர் மாத தீட்சை முடிந்த உடனே இந்த ஜன.17ஆம் தேதியிலிருந்து தாக்குதல்களுக்கு உள்ளான ஆலயங்களைப் பார்வையிடப் போவதாக சின்ன ஜீயர் சுவாமி அறிவித்தார்.
தாக்குதலுக்கு ஆளான ஆலயங்களை பரிசீலித்து அதன் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், பக்தர்களுடன் பேசப் போவதாகக் கூறினார். ஆலயங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அறநிலையத் துறைக்கு இருக்கிறது என்றும் ஆலயங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது என்றும் சின்ன ஜீயர் சுவாமி குறிப்பிட்டார்.
மாநிலத்தில் நடந்து வரும் மோசமான சம்பவங்கள் குறித்து அரசாங்கம் மக்களுக்கு தைரியம் கூற வேண்டிய தேவை இருக்கிறது என்று ஜீயர் சுவாமி தனது கருத்தைத் தெரிவித்தார். ஆலயங்களுக்கான பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆலயங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து அரசாங்கம் ஒரு கமிட்டி ஏற்பாடு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி விசாரணை நடக்கும் படியாக கமிட்டி இருக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
ஆலயங்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள் குறித்து வெறும் மடாதிபதிகள் மட்டுமே பேசுவது அல்ல… பொது மக்கள் ஒவ்வொருவரும் இது குறித்துப் பேச முன்வர வேண்டும் என்றார் அவர்.
மேலும், மதம் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்வது தவறு என்றும் அரசியல், ஆன்மீகம் இரண்டும் வெவ்வேறானவை என்றும் சின்ன ஜீயர் சுவாமி தெளிவுபடுத்தினார். சர்ச்சுகள், மசூதிகள் மீது தாக்குதல் நடந்தாலும் தாம் இவ்விதமாகவே எதிர்வினை ஆற்றுவோம் என்றும் கூறினார்.
உயர் நீதிமன்ற உத்தரவுப் படி சென்ற அரசாங்கத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த தமது பயணங்களை ஒத்தி வைத்ததாகவும்… 17ஆம் தேதியிலிருந்து தாம் யாத்திரை மேற்கொள்ளப் போவதாகவும் சின்ன ஜீயர் சுவாமி கூறினார்.
குறிப்பாக, தாம் அரசாங்கத்திற்கு அனுகூலமான நபரும் அல்ல; அதற்காக அனுகூலமில்லாத நபரும் அல்ல என்றும் சின்ன ஜீயர் சுவாமி தெரிவித்தார்.